November 22, 2024

சீனாவும், இந்தியாவும் மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா?

சீனாவும், இந்தியாவும் போட்டி போடுகின்ற, மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா என்ற கேள்வியும் எழுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சீனா தற்போது யாழ்ப்பாணம் வரை ஊடுறுவி இருக்கிறது. பூநகரியில், கௌதாரிமுனையில் அவர்கள் இப்போது கடலட்டை வளர்க்கும் பண்ணையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது கூட அங்கிருக்கும் மக்களுக்கு தெரியாமல் நடந்திருக்கிறது.

முறையான அனுமதிகள் கூட பெறப்படவில்லை. இப்படியெல்லாம் பார்க்கும் போது இன்று சீனா யாழ்ப்பாண குடாநாட்டு பக்கம் சென்றால் அடுத்த பக்கமாக இந்தியா இலங்கை மீது ஆத்திரமடையக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.

ஆகவே அந்த நிலையில் பார்த்தால் அவர்கள் எங்களுக்கு அபிவிருத்தி என்கிற போர்வையில் வருகின்ற போது இந்தியா தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற நிலைமை வருகிறது.

எனவே சீனாவும் இந்தியாவும் போட்டி போடுகின்ற மோதுகின்ற ஒரு போர்க்களமாக இலங்கை மாறப்போகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இப்படியான செயல்பாடுகளை இலங்கை அரசாங்கம் தவிர்த்து கொண்டு அயலில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் சமநிலையான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்களுடைய ஒரு ஆலோசனையாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.