November 22, 2024

அமைச்சுப் பதவி பெரிதல்ல! எதற்கும் தயார் – உதய கம்மன்பில பதில்

தம்முடைய அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக்கொள்ள அல்லது மாற்றியமைக்க ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் காணப்படுவதாகவும், அது குறித்து தான் கவலைப்படப்போவது இல்லையெனவும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சுப் பதவியுடன் அரசாங்கத்துக்கு வரவில்லை எனவும், ஆகவே எப்போது வேண்டுமானாலும் பதவியை கையளிக்க தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சுப் பதவியையும் மீள பெறவும் முடியும் அதனை மாற்றியமைக்கவும் முடியும்.

அந்த வகையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பதவியை என்னிடமிருந்து பெற்று வேறு யாருக்காவது வழங்குவதற்கு தீர்மானித்தால் அதற்கு நான் தயார். ஏனெனில் நான் அமைச்சுப்பதவியுடன் அரசாங்கத்துக்கு வரவில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் அதனை வழங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும்.

மேலும் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. நான் அமைச்சரவைக்கு தெரிவித்ததால் தான் விலை அதிகரிப்பு இடம்பெற்றதாக அரசாங்கத்தில் இருந்து யாரும் தெரிவித்ததாக எனக்கு தெரியாது. அவ்வாறு யாரும் தெரிவித்திருந்தால், அதுதொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஏனெனில் அரசாங்கத்தை நடத்துவது நான் அல்ல. மாறாக ஜனாதிபதியும் அமைச்சரவையுமே என நான் இதுவரை நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எனக்கு எதிராக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க நான் தயாராகவே இருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.