Dezember 3, 2024

அரசியல் எண்ணத்துக்கே முழுக்குப்போட்ட ரஜினி !

எதிர்காலத்தில அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், கடந்த 2017ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்று அறிவித்த ரஜினிகாந்த், கடந்த ஜனவரி மாதம் கொரோனா மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த சூழலில் நடிகர் ரஜினி, கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று(ஜூலை 12) மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் வணக்கம்.

நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்பு போல் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.