November 22, 2024

மீண்டும் மும்முரமாக இலங்கைக்கு கடத்தல்!

சமீப காலமாக மன்னார் வளைகுடா  கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க கடற்கரை கிராமங்களில் மெரைன் பொலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  தனுஷ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக சமையல் மஞ்சள்  கடத்த இருப்பதாக மண்டபம் மெரைன் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று காலை மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வேதாளை மீன்பிடி துறைமுகம் கடலில்  பதிவு எண் இல்லாத சந்தேகத்திற்கு இடமான முறையில் நாட்டு படகு ஒன்று நின்றுள்ளது.

அந்த படகை நோக்கி மெரைன் பொலீசார் கடலில் செல்லும் ஸ்கூட்டரில் சென்ற போது  பொலீஸ் வருவதை கண்டு படகில் இருந்த நபர்கள் கடலில் குதித்து தப்பி ஓடினர்.

பின்னர் மெரைன் பொலீசார் நாட்டு படகில் ஏறி சோதனை செய்த போது படகிற்குள் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக மஞ்சள் இருந்தது தெரியவந்தது.

இதனனயடுத்து நாட்டு படகுடன், மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த மெரைன் பொலீசார் மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்