பங்களாதேஷ் தீ விபத்து! 52 பேர் பலி!!
வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரூப்கஞ்ச் பகுதியில் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளங்கள் இருந்து கீழே குதித்த பலர் படுகாயமடைந்தனர்.
6 தளம் கொண்ட ஆலையில் தீ விபத்து போன்ற அவசர காலங்களில் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் மொத்தம் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிற்சாலையை கட்டியதற்காக ஹசீம் ஜூஸ் தொழிற்சாலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொழிற்சாலைக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயணங்கள் உரிய பாதுகாப்பின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளரின் மகன்கள் 4 பேர் மற்றும் 3 நிர்வாகிகள் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.