சீனாவுடன் கைகோர்த்து மேற்குலநாடுகளை எதிர்த்த இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 47 அமர்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டு மேற்குலக நாடுகளை கடுமையாக கண்டித்துள்ளது இலங்கை.
இந்த தகவலை குளோபல் டைம்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேற்குலக நாடுகளின் மனித உரிமைகள் குறித்த கபடத்தனத்தையும் அதனை அவை நலன்களுக்காக பயன்படுத்துவதையும் இந்த இருநாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.
இராஜதந்திரிகள் கல்விமான்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த இணையவழி நிகழ்வில் கலந்துகொண்டனர் என சீன ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா, ரஷ்யா, பெலாரஸ் உட்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணையாளர் அலுவலக அதிகாரிகள், அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையின் பிரதிநிதி உட்பட பலர் இதில் உரையாற்றியுள்ளனர். ஒவ்வொரு நாடும் தனது சொந்த மக்களின் நலன்களில் கவனம் செலுத்தவேண்டும்,மனித உரிமைகள் குறித்த சர்வதேச கொள்கைகளை தங்கள் நாட்டின் யதார்த்தத்துடன் இணைத்து தங்களுக்கு பொருந்தக்கூடிய முறையை உருவாக்கவேண்டும் என சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் ஜியாங் டுவான் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை விடயங்கள் குறித்து அனைத்து நாடுகளும் தொடர்புகளை பேணவேண்டும்,அழுத்தங்களை கொடுப்பதற்கான அல்லது மற்றவர்களுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில மேற்குலக நாடுகள் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளன தங்களின் பூர்வீக குடிகளை கொலை செய்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். தங்கள் குற்றங்களுக்காக வருந்தி அதனை திருத்திக்கொள்வதற்கு பதில் அந்த நாடுகள் அரசியல் நோக்கங்களுக்காக ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக அப்பட்டமாக பொய்சொல்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் நடவடிக்கைகள் ஐநாவின் சாசனம் மற்றும் கொள்கைகளை மீறியுள்ளன. ஏனைய நாடுகளின் மனித உரிமைகளை பெருமளவிற்கு பாதித்துள்ளன என சீன அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட பல நாடுகளின் தூதுவர்கள் உரையாற்றியுள்ளதுடன் மேற்குலக நாடுகளின் மீது கடும் மனித உரிமை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மேற்குலக நாடுகள் குடியேற்றவாசிகள் சுதேசிகள் சிறுபான்மையினத்தவர்கள் மீது குற்றங்களை இழைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக மேற்குலகினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன இந்த பிரச்சினைகளை அவை அலட்சியம் செய்துள்ளன என தெரிவித்துள்ளனர்.