காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த மற்றுமொரு தந்தை மரணம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் 09) நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி பரந்தன் 11 ம் ஒழுங்கையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி இராசரத்தினம் என்பவரே சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் சாவடைந்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான இராசரத்தினம் கேதீஸ்வரன் கடந்த 1995 ம் ஆண்டு சிங்கள இராணுவமும்,அதன் துணை இராணுவ குழுக்களினால் யாழில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்ட அந்த செல்வமகனை அன்பு தந்தையால் காணாமுடியாத நிலையில் இவ்வாறு சாவடைந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறிய சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட
போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தந்தையாரே இவ்வாறு சாவடைந்துள்ளார்.
நீதியை வேண்டிய போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தந்தையர்கள் சகோதரர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் இதுவரை தங்கள் உறவுகளை காண முடியாமல் பெற்றுக்கொண்ட தரவின் படி வடக்கு, கிழக்கில் சுமார் 213 உறவினர்கள் சாவடைந்த நிலையில் குறித்த தந்தையும் இன்றைய தினம் சாவடைந்துள்ளார்.
எனினும் இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்புக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
சர்வதேச விசாரணைக்கான சாட்சியங்கள் நாளுக்கு நாள் மரணிக்கின்றன இந்த நிலையில் நாம் பரந்து பட்ட போராட்ட வெளிகளை உருவாக்க வேண்டும் அதன் ஊடாகவே சர்வதேச விசாரணையை நிலை நாட்ட முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது