November 22, 2024

வம்ச விருத்தி ஆட்சியில் ராஜ பட்சர்களின் நீட்சி!¨! பனங்காட்டான்

டொன் அல்வின் – டொன் மத்தியு ராஜபக்ச சகோதரர்களின் காலத்தில் ஓரமாக உருவெடுத்த குடும்ப அரசியல் பிரவேசம், மகிந்த காலத்தில் இறுக்கம் பெற்று இன்று வம்ச விருத்தியாகி சாமல், மகிந்த, கோதபாய, பசில், நாமல், சசீந்திர என நீட்சி பெற்றுள்ளது. இவர்களை ஆட்சி பீடமேற்றிய சிங்கள பௌத்தர்கள் விரும்பியது என்னவோ, நடைபெறுவது வேறென்னவோ!

வருவார், வரமாட்டார், வருகிறார் என்றெல்லாம் பேசப்பட்டவர் கடைசியில் வந்தேவிட்டார். அவருக்காகவே பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாகவிருந்த ஜெயந்த கெட்டகொட தமது பதவியை விட்டுக் கொடுத்தார் (பதவி துறந்தார்).

ராஜபக்ச சகோதரர்களின் நான்காவதவரான பசில் ராஜபக்ச நிதி அமைச்சராகவும், தேசியப் பட்டியல் எம்.பியாகவும் பதவி ஏற்றுவிட்டார். இதற்கு முரண்பாடாகவிருக்கும் சில அமைச்சர்களின் எதிர்காலம் விரைவில் முடிவாகலாம்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இவரே பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் என்றும் அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். ராஜபக்ச குடும்பத்தை இலங்கை அரசாட்சியில் அரியாசனம் ஏற்றிய மகிந்த ராஜபக்ச, வயோதிபம் மற்றும் உடல் உபாதைகளுடன் தமது அமைச்சுகள் சிலவற்றையும் இழக்க ஆரம்பித்துள்ளார்.

பிரதமர் என்னும் அலங்காரக் கதிரையில் அமர்த்தப்பட்டுள்ள மகிந்த, எந்த விடயத்திலும் முடிவெடுக்கும் தகைமையை இழந்து அனைத்துக்கும் தம்பி கோதபாயவை அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார். தம்மை நாடிவரும் அமைச்சர்கள், எம்.பிக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது – ஜனாதிபதியுடன் பேசுங்கள் – என்று பவ்வியமாகக் கூறிவிட்டு மெதுவாக ஒதுங்கிக் கொள்கிறார்.

பொதுஜன பெரமுனவின் உருவாக்கத்திலும் அதன் தேர்தல் வெற்றியிலும் பிரதானியாகவிருந்த நாரகன்பிட்டி அபேராம விகாராதிபதி இன்றைய போக்கில் விரக்தியடைந்து, கோதபாய மீதான குற்றச்சாட்டுகளை இவரிடம் தெரிவித்தபோது – கோதபாய நல்லவர், ராணுவத்திலிருந்து வந்தவர், அரசியல்வாதியல்ல, எதற்கும் அவரை நேரில் சந்தித்துப் பேசுங்கள் என்று கூறி தப்பித்துக் கொண்டவர் மகிந்த என்றால், அவரது இன்றைய இருப்பைப் புரிந்து கொள்ளலாம்.

சிங்கள பௌத்த மக்களே என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தவர்கள், எனது இனத்துக்கும் எனது மதத்துக்கும் நான் என்றும் பணியாற்றுவேன் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த கோதபாயவை இன்று அந்த மக்களே வெறுக்கின்றனர், எதிர்க்கின்றனர், விமர்சிக்கின்றனர்.

இதனால், இன்னொரு இணைத்தலைமை ஆட்சிக்குத் தேவைப்படுகிறது. அது சிங்கள பௌத்தர்களை சமாளிப்பதற்கு. அந்த வெற்றிடத்துக்கே பசில் ராஜபக்ச கொண்டு வரப்பட்டுள்ளார்.

2015ம் ஆண்டுத் தேர்தலில் மகிந்த தோல்வியடைந்தபோது அவரது குடும்பத்தினரின் ஆத்திரம் பசில் மீது பாய்ந்தது. முக்கியமாகஇ மகிந்தவின் மனைவியும் – நாமல் உட்பட மூன்று புதல்வர்களும் பசிலை அரசியலிலிருந்து அகற்ற வேண்டுமென வேண்டினர். மகிந்தவின் நிலையும் இதற்கு ஆதரவாகவே இருந்தது.

நாமல் ராஜபக்சவை எம்.பியாக்கி அமைச்சராக்கி, பிரதமராக்கி ஜனாதிபதியாக்க வேண்டுமென்ற தங்கள் கனவுக்கு பசில் எப்பொழுதுமே தடையாக இருப்பாரென முழுக்குடும்பமும் நம்பியது. இந்தப் பின்னணியில்தான் 2020ம் 2021ம் ஆண்டுத் தேர்தல்களை மகிந்த நோக்கினார். தம்மால் ஜனாதிபதி பதவிக்குக் கொண்டுவரப்படும் கோதபாய இதனைப் புரிந்து கொள்வார் எனவும் எதிர்பார்த்தார்.

1970ல் அனுர பண்டாரநாயக்கவுக்கு சிறிமாவோவும், 1977ல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் தங்களின் அமைச்சரவையில் வழங்கிய முக்கியத்துவத்தைஇ தமது மகன் நாமலுக்கு கோதபாய வழங்கவில்லை என்ற ஆதங்கம் மகிந்தவை வெகுவாக வாட்டியது. இயலாமையும் முதுமையும் விரும்பியவாறு செயற்பட முடியாமையும் மகிந்தவின் மனவேதனையை அதிகரிக்கச் செய்தது.

இதனை சற்றுப் புரிந்து கொண்ட கோதபாய சில வாரங்களுக்கு முன்னர் நாமலுக்கு முன்னைய விளையாட்டுத்துறை அமைச்சுடன் மேலும் ஒரு ராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை உட்பட சில களப்பணிகளையும் வழங்கினார். அடுத்த பிரதமர் நாமல்தான் என்ற தகவலையும் மெதுவாக ஊடகங்களுக்கு கசிய விட்டு மகிந்தவை அமைதிப்படுத்த முயற்சித்தார்.

மறுதரப்பில், அமெரிக்க இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள பசில் ராஜபக்சவை எம்.பியாகவும் நிதி அமைச்சராகவும் நியமிக்கும்போது, தானும் தனது குடும்பமும் குழப்பம் அடையக்கூடாது என்பதற்காகவே நாமலுக்கு சில சலுகைகளை வழங்கினார் என்பதை மகிந்த பின்னரே புரிந்திருப்பார்.

இனி, ராணுவத்தரப்பை கோதபாய பார்த்துக் கொள்வார். அரசியல் தரப்பை பசில் பார்த்துக் கொள்வார். சொல்லப் போனால் பசிலை பிரச்சனைகளுக்கான கற்பகதருவாகவும் காமதேனுவாகவும் மக்களுக்குக் காட்டியுள்ளார் கோதபாய. மகிந்த அதிகாரமில்லாத அலங்காரக் கதிரையில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சவையும் ஒருவாறு சமாளிக்க வேண்டுமென்பதற்காக அவரது மகன் சசீந்திர ராஜபக்சவுக்கு ராஜாங்க அமைச்சர் பதவி இந்த வாரம் வழங்கப்பட்டதையும் இங்கு கவனிக்க வேண்டும். எண்ணிப் பார்த்தால் சாமல், மகிந்த, கோதபாய, பசில் என்னும் நான்கு சகோதரர்களும் அடுத்த பரம்பரையினரான நாமல், சசீந்திரவும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர்.

1970ம் ஆண்டுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடும்பத்தினர் சுமார் நூறு பேருக்கு மேல் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். 1977ம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சிறிமாவோ ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக குடும்ப மரம் என்ற பிரசுரம் ஒன்றை மும்மொழிகளிலும் நூலாக வெளியிட்டது. இதனைத் தயாரித்தவர் அமைச்சர் காமினி திசநாயக்கவின் மைத்துனரான கலாநிதி விக்கிரம வீரசூரிய.

இப்பிரசுரத்தின் அட்டையில் ஒரு பாரிய விருட்சம். அதன் ஒவ்வொரு கிளைகளிலுமுள்ள இலைகளில் ஒவ்வொருவரின் பெயர். பிரசுரத்தின் உள்ளே அவர்கள் ஒவ்வொருவரும் வகிக்கும் பதவிகள், பெறும் சம்பளம், சிறிமாவோவின் குடும்பத்துக்கும் அவர்களுக்குமான உறவு முறை என்பன விபரமாக அச்சிடப்பட்டிருந்தது.

சிறிமாவோவின் ஆட்சிக்கு இந்தப் பிரசுரமே சாவு மணியடித்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் 140 ஆசனங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். சிறிமாவோ தரப்புக்கு எட்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. இவரின் சகாக்களான சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சியினர் வேருடன் பிடுங்கி எறியப்பட்டனர்.

1947ல் இருந்து 1977 வரை ஆட்சி புரிந்த நாயக்கர்களிடமிருந்து (சேனநாயக்க, பண்டாரநாயக்க) ஜெயவர்த்தனவின் கைகளுக்கு மாறிய அரச இயந்திரம், 2005ல் முதன்முறையாக ராஜபக்ச குடும்பத்துக்கு மாறியது.

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1951ல் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறியபோது அவருடன் சேர்ந்து வெளியேறி சிறிலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கியவர்களுள் ஒருவர் மகிந்தவின் தந்தையான டொன் அல்வின் (டி.ஏ) ராஜபக்ச என்பதால் அந்தக் குடும்பத்தின் மீது சிறிமாவோக்கு எப்போதுமே மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. அதனால் 1970 பொதுத்தேர்தலின்போது அம்பாந்தோட்டையின் பெலியத்த தொகுதியில் போட்டியிட அக்குடும்பத்தின் மூத்த புதல்வரான சாமல் ராஜபக்சவை அழைத்தார்.

அவ்வேளை பொலிஸ் சேவையிலிருந்த அவர் அதனை ஏற்காது, தமது தம்பி மகிந்தவின் பெயரை சிபார்சு செய்தார். அவ்வேளை 24 வயது இளைஞராகவிருந்த மகிந்தவுக்கு அதிர்ஸ்டம் அடித்தது. அத்தேர்தலில் வயதில் மிகக்குறைவான எம்.பியாக நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 1977 தேர்தலில் தோல்வியடைந்து 1989 வரை சாதாரண பிரஜையாக இருந்தபோதிலும், அக்காலத்தை வீணாக்காது தமது நீண்ட அரசியல் வாழ்வுக்கான விதைகளமாக்கினார்.

1989 முதல் இன்றுவரை எம்.பியிலிருந்து ஜனாதிபதி வரை பதவி வகித்த இவரே, தமது குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக அரசியலுக்குள் இழுத்து வந்தவர்.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற கோதபாயவை பாதுகாப்புச் செயலாளராக்கி, இப்போது ஜனாதிபதியாக்கினார். ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது அவரது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்திருந்த பசில் ராஜபக்சவை மெதுவாக இழுத்து அரவணைத்து தமது கட்சிக்குள் கொண்டு வந்து அமைச்சராக்கி சகல அதிகாரங்களையும் வழங்கினார்.

பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற தமையனார் சாமல் ராஜபக்சவை எம்.பியாக்கி, சபாநாயகராக்கி அமைச்சராக்கினார். அவரின் புதல்வர் சசீந்திரவை ஊவா மாகாண முதலமைச்சராக்கி பின்னர் எம்.பியாக்கியதால், இப்போது அவர் ராஜாங்க அமைச்சராகியுள்ளார்.

மகிந்தவின் தந்தையின் சகோதரரான டி.எம். ராஜபக்சவின் புதல்வர்கள் லக்ஸ்மன் ராஜபக்ச, ஜோர்ஜ் ராஜபக்ச (இருவரும் எம்.பிக்களாக இருந்தவர்கள்) குடும்பத்தினரையும் மகிந்த மறக்கவில்லை. ஜோர்ஜ் ராஜபக்சவின் மகள் நிருபமா ராஜபக்சவுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கினார். இவரது கணவர் யாழ்ப்பாணத்தவரான திருக்குமரன் நடேசன். இவரே மகிந்தவுடன் தமிழகத்துக்கு திருத்தல யாத்திரைகளில் கூடச் செல்பவர்.

ராஜபக்ச வம்சத்தை இலங்கை அரசியலில் மகுடத்தில் ஏற்றி வைத்த மகிந்த, இ;ப்போது தமது மகன்மாரில் ஒருவருக்காவது உரிய இடம் கிடைக்குமா என ஏங்கியிருக்கிறார். வம்ச விருத்தி வேறு திசை நோக்கிச் செல்வதை அவரால் அவதானிக்க முடிகிறது.

பசிலின் மனைவியும் சட்டத்தரணியுமான அமெரிக்க இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற புஸ்பா ராஜபக்ச இலங்கை திரும்பி சில பொதுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கொழும்பு, களுத்துறை, கம்பகா மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாண சபையின் முதல் அமைச்சர் பதவிக்கு இவரைக் களமிறக்க ஏற்பாடாகி வருகிறது.

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் கோதபாயவின் ஒரே மகன் மனோஜ் கோதபாயவும் அரசியலில் கண் வைத்திருப்பதாக நம்பகமான தகவல்.

இன்றைய வம்ச விருத்தி ஆட்சியில், ராஜ பட்சர்களின் நீட்சி எதுவரை என்ற கேள்வியே இவர்களைப் பதவிக்குக் கொண்டு வந்த சிங்கள பௌத்தர்கள் முன்னால் எழுந்து வருகிறது. கவிழ்ந்து காணாமற்போன சிறிமாவோ, ஜெயவர்த்தன ஆட்சிகளை இவர்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்துகின்றனர்.