November 22, 2024

சீனர் கூட்டு:கௌதாரிமுனை மீனவர்களிற்கு அழுத்தம்!

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள்; பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சீனர்களுடன் கூட்டுச்சேர உள்ளுர்

மீனவர்கள் அச்சுறுத்தப்பட்டுவருகின்றனர்.ஈபிடிபி சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை பினாமியாக முன்னிறுத்தி குறித்த கடலட்டை பண்ணை இயக்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சி பூநகரியில் அமைக்கப்பட்டு வரும் குறித்த பண்ணை தொடர்பில் அண்மைக் காலமாக பூதாகாரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமது செயற்பாடுகளை அவர்கள் தொடரும் விதமான படங்கள் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

கௌதாரிமுனையில் கடற்றொழிலில் ஈடுப்பட்டு வருகின்ற தொழிலாளர்கள் பலர் தாங்கள் கடலட்டை வளர்ப்பதற்கு கோரிக்கை விடுத்தும் தங்களுக்கு அதற்குரிய ஏற்பாடுகள் எதுவும் இதுவரை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்றும், ஆனால் சீன நிறுவனம் ஒன்று தங்களின் கடற்பரப்பிற்குள் பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த நிறுவனத்துடன் தங்களுடைய கௌதாரிமுனை கடற்றொழிலார் அமைப்பை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறும் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் கோரி வருவதாகவும் ஆனால் தாங்கள் கைச்சாத்திடவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடலட்டைப் பண்ணை தொடர்பில் பூநகரி பிரதேச செயலகத்தில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.