November 22, 2024

டக்ளஸ் தேடுகின்றார்!

 

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர்வேளாண்மையை விருத்தி செய்யும்  நோக்கில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்க கோரியுள்ளார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்றுமதித் தரத்திலான நண்டு, இறால், மீன் வளர்ப்பு பண்ணைகளை உருவாக்கி நீர்வேளாண்மையை விருத்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சீன கூட்டில் காணிகள் தாரை வார்க்கப்பட்டுள்ள நிலையில் அவர் இப்போது புதிய தொழில் முயற்சிகளிற்காக காணிகளை தேடுவதில் குதித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது கண்டறிந்து அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் நீர்வேளாண்மை பண்ணைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக கோரப்பட்டுள்ளது.அவ்வகையில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. இரத்நாயக்காவுடனான சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.