November 22, 2024

ஹைட்டி நாட்டின் அதிபர் சுட்டுக்கொலை!! மனைவி படுகாயம்!!

 

ஹைட்டி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோஸ் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதிபரின் மனைவிபடுகாயமடைந்துள்ளார்தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் அமைந்துள்ள அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போதே இனம் தெரியாத ஆயுததாரிகளால் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணியளவில் (05:00 GMT) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஹைட்டி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். அவரை கொலை செய்தது வெளிநாட்டவர் என்றும், அவர்கள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த படுகொலையை, ‘மனித தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்’ என கண்டனம் தெரிவித்துள்ள ஜோசப், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அவர் அனைவரையும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் அவசரகால நிலையையும் அறிவித்துள்ளார்.

மோஸ் 2017 முதல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஹைட்டியை வழிநடத்தியிருந்தார், ஆனால் அவரைப் பதவி விலகக் கோரி பரவலான எதிர்ப்புக்களை எதிர்கொண்டார்.

நாட்டின் சமீபத்திய வரலாறு சதித்திட்டங்கள், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பரவலான கும்பல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் „திரு மோஸின் மரணத்தில் வருத்தப்படுவதாக“ ட்வீட் செய்துள்ளார், இது „வெறுக்கத்தக்க செயல்“ என்று கூறி அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஹைட்டி மக்களுக்கு „கொடூரமான படுகொலைக்கு“ இரங்கல் தெரிவித்தார்.

முதல் பெண்மணி மார்ட்டின் மோஸ் பின்னர் விமானத்தில் தெற்கு புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் சிகிச்சைக்காக வந்ததாக கூறப்படுகிறது. அவரது நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.