November 22, 2024

ஆயர்கள் தனிவழியல்ல: விசுவாசம் காட்டும் இம்மானுவேல்!

வட கிழக்கு ஆயர் மன்றம் அரசியல் சார்ந்தல்ல மாறாக ஆன்மீகம் சார்ந்தது என பல்டியத்து கொழும்பை சாந்தப்படுத்தியுள்ளார் கலாநிதி

எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகள் .வழமையாக முன்னர் லண்டனிலிருந்து தெற்கு ஆட்சியாளர்களிற்கு விசுவாசம் தெரிவித்துவந்த இமானுவேல்  தற்போது வட கிழக்கு ஆயர் மன்றம் யாருக்கும்  எதிரானதல்ல – அது செயற்பாடு மூலம் தெளிவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார்; ஈஸ்ரர் தாக்குதல் பற்றி சிங்கள ஆயர்கள் குரல் எழுப்புகின்றனர். அதனை அவர்கள் அரசியலாகக் கருதவில்லை. முள்ளி வாய்க்கால் பற்றி வட கிழக்கு ஆயர் மன்றம் அறிக்கை வெளியிட்டது சிறப்பானது. அது அரசியல் அல்ல. அதேபோல் இன்னும் பல அறிக்ககைள் மனிதாபிமான அடிப்படையில் வெளிவரவேண்டும்.வட கிழக்கு ஆயர் மன்றம் உரோமைக்கோ சிங்கள் ஆயர்களுக்கோ இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவைக்கோ எதிரானதல்ல என்பது முதலில் செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் திருச்சபை தமிழ் மக்கள் பற்றி என்ன பேசினாலும் அது அரசியலாகவே கருதப்படுகிறது

வட கிழக்கு தமிழ் ஆயர்கள் மன்றம் கடந்த ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகச் செயற்படுகிறது. ஆனால் அதன் அறிக்கைகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதுவும் மிக முக்கியமான முள்ளி வாய்க்கால் பற்றி வெளியானது சிறப்பானது. இது பலரின் கவனத்தையும் குறிப்பாக இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சிங்கள ஆயர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் மக்களுக்குச் சார்பாகவோ அல்லது எதிராகவோ எதுவும் பேசப்பட்டால் பேசுவது    தமிழர்களாகவோ அல்லது சிங்களவர்களாகவோ இருந்தாலும் அது என்ன விடயமாக இருந்தாலும் பேசுவதெல்லாம் அரசியலாகவே கருதப்பட்டது. இதனால் தமிழ்க் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடம் பிரச்சினை வேண்டாம் என்று  அமைதி காத்து வந்துள்ளது.

நான் மேலே குறிப்பட்டது போல் ஈஸ்ரர் தாக்குதல் பற்றி சிங்கள ஆயர்கள் குரல் எழுப்புகின்றனர். அதனை அவர்கள் அரசியலாகக் கருதவில்லை. அது மனிதாபிமானத்தின் குரல் என்றே கருதப்படுகிறது. காரணம் அது சிங்;கள மக்களின் பிரச்சினை பற்றிச் சிங்களத் தலைமைப் பீடத்தினால் பேசப்படுவது.   ஆனால் தமிழ்த் திருச்சபையின் தலைமைப்பீடம் தமிழ் மக்கள் பற்றி என்ன பேசினாலும் அது அரசியலாகவே கருதப்படுகிறது. சிங்களத் தலைமைப்பீடமும் தமிழ் மக்கள் சார்பாக என்ன வந்தாலும் அதை எதிர்ப்பதிலேயே கண்ணாக இருந்துள்ளது.

சிங்களக் கத்தோலிக்க மக்களையும் தமிழ்க் கத்தோலிக்க மக்களையும் இணைக்கின்ற பாலம் கத்தோலிக்கம்

கத்தோலிக்கம் சிங்களக் கத்தோலிக்க மக்களையும் தமிழ்க் கத்தோலிக்க மக்களையும் இணைக்கின்ற ஒரு பெரும் பாலமாகும். இலங்கையில் இந்து மதத்திற்கோ பௌத்த மதத்திற்கோ இல்லாத அல்லது கிடைக்காத அரிய பலம் இதுவாகும். இதனைக் கத்தோலிக்க திருச்சபையின் சிங்கள மற்றும் தமிழ் ஆயர்களைக் கொண்ட தலைமைப்பீடமான இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை உரிய விதமாகப் பயன்படுத்தி இலங்கையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் கொண்டு வரத் தவறிவிட்டமை கவலைக்குரியதெனவும் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகள் தெரிவித்துள்ளார்.