November 22, 2024

பிலிப்பைன்சில் இராணுவ வானூர்தி விபத்து!! 45 பேர் பலி! 53 பேர் காயங்களுடன் மீட்பு!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இராணுவ சரக்குக்காவி வானூர்தி விபத்துக்குள்ளாகிய 45 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 53 பேர் காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ளனர்.பிலிப்பைன்சின் தென்பகுதியில் இந்த வானூர்தி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

இராணுவ சரக்குக்காவி வானூர்தி 96 பயணிகள் பயணித்துள்ளனர். பெரும்பாலும் அவர்கள் இராணுவத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வானூர்தி சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். தப்பியவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

லாக்ஹீட் சி130 ஹெர்குலஸ் என்ற வானூர்தி விபத்துக்குள்ளாகியபோது பந்து போன்று பெரும் கரும்புகைகள் மேலே எழுந்து வந்தன.

வானூர்தி ஜோலோ நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி 11:30 மணிக்கு (03:30 GMT) தெற்கு தீவான மிண்டானாவோவில் உள்ள ககாயன் டி ஓரோவிலிருந்து இராணுவத்தினரை ஏற்றிச் சென்றது.

அபு சயாஃப் குழு போன்ற இஸ்லாமிய போராளிகளை எதிர்த்துப் போராடுவதற்காக தெற்கு பிலிப்பைன்ஸில் இராணுவத்தினர் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

வானூர்தி தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், மீட்பு நடவடிக்கை முடிந்ததும் விசாரணை தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானூர்தியில் இருந்தவர்களில் பலர் அண்மையில் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்திருந்தவர்கள் என ஏ.எவ்.பி செய்தி குறிப்பிட்டுள்ளது.