சிறிய கிராமத்தில் பிறந்தவர் இன்று உலக பணக்காரர்களில் ஒருவர்! சாதனை தமிழனின் வியக்க வைக்கும் கதை
சிவ் நாடார்! ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரு தமிழ் பெயர்.
தற்போது உலக பணக்காரர்கள் வரிசை சிவ் நாடார் 71வது இடத்தில் உள்ளார். அவரின் நிகர மதிப்பு $23.5 பில்லியன் ஆகும். ஒரு தமிழர் இவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதில் அவரின் பெருமை இல்லை.
அந்தப் பணத்தைக் கொண்டு அவர் செய்யும் நல்ல விஷயங்களில்தான் இருக்கிறது. ஆம் தூத்துக்குடியில் மூலைமொழி கிராமத்தில் பிறந்து தமிழ்வழி கல்வி பெற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், கோவை PSG கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்த சிவ் நாடார் உலகின் டாப் பில்லினியர்களில் ஒருவர்.
சிவ் நாடாரின் தந்தை சுப்பிரமணிய நாடார் நீதிபதியாகப் பணியாற்றியவர். சிவந்தி ஆதித்தனாரின் உறவினர் இவர்.
என்னதான் செல்வ வளமுள்ள குடும்பத்தில் பிறந்தாலும், அப்போதைய செல்வந்தர்களின் பிள்ளைகள் போல இவர் ஊட்டியிலோ கொடைக்கானலிலோ கான்வென்டில் படித்தவரல்ல. தனது ஊரிலேயே அரசு பள்ளியில் படித்தவர்.
அது போல, வணிகத்துக்குப் பேர் போன சமூகத்தில் பிறந்திருந்தாலும் வழக்கமான வணிகத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே அப்பொழுது வெகு சிலர் மட்டுமே செய்து கொண்டிருந்ததைத் தேர்ந்தெடுத்து அதில் இறங்கி வென்றவர். இந்த விஷயங்கள்தான் சிவ் நாடாரை பலரிடமிருந்து வேறுபடுத்துகின்றன.
சிவ் நாடார் தன் கல்லூரிப் படிப்பை முடித்தபின் டி.சி.எம். (DCM) நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக ‘மைக்ரோகாம்ப்’ என்ற பெயரில் டெலிடிஜிட்டல் கால்குலேட்டர்கள் விற்கும் சிறு நிறுவனத்தைத் தொடங்கினார்.
அது ஓரளவு வெற்றி பெற, 1976ஆம் ஆண்டு எச்.சி.எல். (HCL) கணினி நிறுவனத்தை நிறுவினார். முதலில் எலக்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். வெளிநாடுகளிலிருந்து கணினி உதிரி பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம், புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் என கணினி விற்பனையில் பல பரிமாணங்களிலும் இயங்கினார்.
கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன. இந்த மாற்றங்களை எல்லாம் தனது ஏற்றத்திற்கு நன்கு பயன்படுத்திக்கொண்டார் சிவ் நாடார்.
அப்போது அமைந்த ஜனதா கட்சி ஆட்சியில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தொழில்துறை அமைச்சராக வந்து எடுத்த நடவடிக்கைகள் இந்திய தொழில் முனைவோருக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்தது.
அந்நிய தொழில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் குறைக்கப்பட்டு இந்தியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அந்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் சிவ் நாடார். shiv nadar vidya gyan இப்படி, ஹெச்.சி.எல் நிறுவனம் லாபம் தரும் ஒரு பெரும் நிறுவனமாக உயர்ந்து வந்த நிலையில் தன் அம்மாவிடம் ”அம்மா இந்த பணத்தையெல்லாம் வைத்து என்ன செய்யட்டும்” என்று கேட்ட அவரிடம் ”இல்லாதவர்க்கு நல்லது செய்” என்ற கூறிய தனது அம்மாவிடம் இருந்துதான் தன் ஈகைப் பண்பை வளர்த்துக்கொண்டேன் என்று மெய்சிலிர்க்கிறார் சிவ் நாடார்.
2016க்குப் பின் மட்டுமே 650 கோடிக்கும் மேலாக ஏழை மாணவர்களின் கல்விக்காக செல்வழித்துள்ளார் என்றால் யோசித்துக்கொள்ளுங்கள்.
எந்தவொரு சர்வதேச நிறுவனமும் தனக்கென வரும் லாபத்தில் சமுதாய பணிக்கென ஒரு பங்களிப்பை கொடுக்க வேண்டும். சிஎஸ்ஆர் (CSR) என்ற பெயரில் இதைக் கட்டாயமாகியிருக்கிறது அரசு.
அதற்காக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்கு பேருந்து நிலையம், நிழற்குடை, சாலை தடுப்புகள், தண்ணீர் தொட்டிகள் என வாங்கி வைத்து அனைத்திலும் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பதித்து அதையும் விளம்பரமாக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில், “கல்விதான் ஒரு மனிதனுக்கு உண்மையான வளர்ச்சியாக இருக்கும்” என்று கூறி தமிழகத்தில் SSN பொறியியல் கல்லூரியையும் உத்திர பிரதேசத்தில் வித்யாஞான் பள்ளியையும் தொடங்கி லாபநோக்கமில்லாது, எளிய மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறார்.
இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் சாதாரணமானவை அல்ல. SSN கல்லூரி அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் எப்பொழுதுமே முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது. வித்யாஞான் பள்ளி உலகத் தரத்தில் செயல்படுவது.
அரசு பள்ளியில் நன்றாகப் படித்த, படிக்கும் ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயரிய கல்வியைக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகின்றன இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும். ஒவ்வொரு கல்வியாண்டிலும் 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் SSN கல்லூரியில் இலவசமாகப் பயின்று பெருநிறுவனங்களில் பணிக்குச் செல்கின்றனர்.
இந்தியா மென்பொருள் துறையில் மிகப் பெரிய இடத்தைப் பெற்றிருக்கும் நாடு. உலகப் பெரு நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர். ஆனால், கணினி வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட முதன்மை இந்திய நிறுவனங்களில் ஒன்று சிவ் நாடாரின் HCL நிறுவனம்.
தன்னைச் சுற்றி ஏற்படும் மாற்றங்களையெல்லாம் உணர்ந்து, அதை தொழிலுக்குப் பயன்படுத்தி அதில் முன்னணி இடத்தைப் பெற்றார். தொடர்ந்து வெற்றியின் ஓட்டத்திலேயே இருந்த பொழுதும் தன்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் யோசித்து அதற்கான உதவிகளையும் செய்கிறார்.