ஆவா குழு:போட்டிக்கு ஜி குழுவாம்?
கோண்டாவில் செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பொலிஸார் கூறினர்.
கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 3 பிரதான சந்தேக நபர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் கொக்குவில் வராகி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
மூவரிடமும் முன்னெடுத்த விசாரணையில் சம்பவ தினத்தன்று 6 மோட்டார் சைக்கிள்களில் 16 பேர் இணைந்து இந்த வன்முறையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
ஆவா குழுவிலிருந்து பிரிந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜி குழு என்று ஆரம்பித்தனர். அவர்கள் ஜி குழுவுக்கு பாடல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டனர்.
அதனாலேயே அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்த ஸ்டியோவுக்கு தீவைத்ததாகும் ஜி குழுவைச் சேர்ந்தொருக்கு வாளினால் வெட்டியதாகவும் பிரதான சந்தேக நபர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மூவரிடமிருந்து 3 கஜேந்திர வாள்களும் 2 சாதாரண வாள்களும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டன.
மேலும் தெல்லிப்பழை, காங்கேசன்துறை, பொம்மைவெளி, கோண்டாவிலைச் சேர்ந்த 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்துள்ளவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
பிரதான சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் – என்றனர்.