துமிந்தவை விடுவிக்கலாம் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது!
ஜனநாயகத்தை பின்பற்றும் ஒரு நாடு துமிந்த சில்வாவை விட்டது ஜனநாயக விரோத செயல், இந்த நாட்டின் அதி உச்ச நீதிமன்றில் 07 நீதியரசர்கள் முன்லையில் கொலை செய்தார் என்பதை சுட்டிக்காட்டி தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒரு கைதியை எவ்வாறு விடுதலை செய்வது?என நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் சிறுமியை கொலை செய்த சுனில் ரத்னாயக்க என்பவரை கூட விடுதலை செய்திருக்கின்றது. ராஜகிரிய பகுதியில் ஒரு பெண்ணைப் பிடித்து தலையை அடித்து கொலை செய்த கொலைகாரணையும் விடுதலை செய்திருக்கின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ததை நான் ஒரு நாடகமாகவே பார்க்கின்றேன். ஏனெனில் ஜி.எஸ்.பி பிளஸ் வரியை இழந்துவிடுவார்கள் என்ற காரணத்திற்காகவே அரசியல் கைதிகளை இவர்கள் விடுதலை செய்துள்ளனர்.
இன்றும்கூட மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்று கேட்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்கின்ற நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
துமிந்த சில்வா தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைக்காக ஒருவரை கொலை செய்தவர் ஆகவே துமிந்த சில்வாவையும் அரசியல் கைதியும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இவை இரண்டும் இரண்டு வடிவங்கள் .
சீன நாடு என்பது ஒரு நாட்டுக்கு கடன் வழங்கி அதனூடாக அந்த நாட்டுக்குள் தனது ஆதிக்கத்தைத் திணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் நாடாகத்தான் தற்போதும் திகழ்கின்றது.
உதாரணமாக பல ஆபிரிக்க நாடுகளில் சீனா ஆக்கிரமித்துள்ள செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட நாடுகள் சீனர்களை அந்த நாட்டுக்குள் இருந்து திருப்பி அனுப்பும் நிலையில் எங்களது நாடு மட்டும்தான் சீனர்களை வா வா என்று கூறி தொல்லையை வீட்டுக்குள் எடுக்கின்றது.
வடக்கு கிழக்கு தான் அதிக வளங்கள் கூடிய பிரதேசமாக இருக்கின்றது. இலங்கையை எடுத்துப் பார்த்தோமானால் போத்துக்கீசர் ஆக இருக்கட்டும் ஒல்லாந்தர்களாக இருக்கட்டும் கரையோரப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.
ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பாலான கடல் பிரதேசங்களாக எமது பிரதேசங்கள் இருக்கின்றது, சீனர்கள் அதிகமாக எமது பிரதேசத்தை கை வைப்பதற்கு தான் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
இன்று கடலட்டை வளர்ப்பவர்கள் இன்னும் சில நாட்களில் கொச்சி தோட்டம் செய்யலாம், எமது வாவிகளில் மீன் பிடிக்கலாம் இது ஒட்டுமொத்தத்தில் சீனாவினுடைய ஒரு இராஜதந்திர நடவடிக்கை.
துறைமுக நகரம் இதன் முக்கிய காரணம் வரி கட்டத்தேவையில்லை இவற்றை வைத்து வரி இல்லாமல் தொழிலை செய்வதற்கான நடவடிக்கை சீனர்களுக்கு வழங்க காரணமாக இருக்கின்றது.
இது உண்மையிலேயே ஆரம்பம் தான் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் கிழக்கை மீட்கப் போகிறோம் என்று வந்தவர்கள் எதிர்வரும் காலங்களில் சீனாவிடம் இருந்து கிழக்கை மீட்க வேண்டும் என்ற காலம் வந்தாலும் வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.