அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு” அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!
நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்ததை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நீட் பற்றிய ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது என்று பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதம் செய்தார். நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது; கிராமப்புற, ஏழை மாணவர்களை நீட் தேர்வு பாதிக்கும் என்றும் அவர் வாதிட்டார்.இதை தொடர்ந்து கரு. நாகராஜன் வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் தர உத்தரவிட்டு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளியே வந்துள்ளது. நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது.சட்டமன்றத்தில் ஆதரவாகவும், வெளியில் எதிர்ப்பாகவும் பாஜகவினர் செயல்படுகின்றனர். நீட் தேர்வு விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு பற்றிய அதிமுகவின் கருத்தை எதிர்க்கட்சி தலைவர் தெரிவிக்க வேண்டும். 86,000-க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு தொடர்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்; 13 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கில் உரிய பதிலை நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கவும் திமுக மேற்கொண்ட முயற்சியை காரணம்” என்று கூறிய அவர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டெல்டா ஒரு ஆய்வகம் அமைக்கப்படும். டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் நலமுடன் உள்ளார்கள் என்று தெரிவித்தார்