சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து… வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து… வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்திருக்கிறார் போர்ச்சுகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கிறிஸ்டியானோ ரொனால்டோ – கால்பந்து உலகின் மகத்தான வீரர்களில் ஒருவர். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராகக் கொண்டாடப்படுபவர். வரலாற்றுப் புத்தகங்களில் பல பக்கங்கள் இவர் பெயரைத் தாங்கி இருக்கும் அளவுக்கு சாதனைகள் படைத்திருக்கிறார். இப்போது அந்த மகுடத்தில் இன்னொரு முத்தாக, போர்ச்சுகல் அணிக்காக தன் 109-வது கோலை அடித்து, இரானின் அலி தாய் வைத்திருந்த சாதனையை சமன் செய்திருக்கிறார்.
2002-ம் ஆண்டு போர்ச்சுகலின் ஸ்போர்டிங் சி.பி அணியில் தொடங்கிய அவர், மான்செஸ்டர் யுனைடட், ரியல் மாட்ரிட், யுவன்டஸ் என ஐரோப்பாவின் பல முன்னணி அணிகளுக்கு விளையாடியிருக்கிறார். கிளப் கால்பந்தில் சுமார் 650 கோல்களுக்கும் அதிகமாக அடித்திருக்கும் ரொனால்டோ, ஒவ்வொரு லீகிலும் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார். பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஆ என மூன்று பெரிய லீக் பட்டங்களையும் வென்ற ஒரே வீரர் அவர்தான். யுனைடட், மாட்ரிட் இரண்டு அணிகளுக்காகவும் சாம்பியன்ஸ் லீக் வென்றிருக்கிறார். இரண்டு அணியில் இருக்கும்போதும் பாலன் டி ஓர் விருது வென்றிருக்கிறார். இதுவரை 5 பாலன் டி ஓர் விருது வென்றிருக்கும் ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் 5 முறை வென்றிருக்கிறார்.
ஐரோப்பிய கோல்டன் ஷூ, ஃபிஃபா பிளேயர் ஆஃப் தி இயர், புஸ்கஸ் அவார்ட் என இவர் வாங்காத விருதுகளே இல்லை. வெற்றி பெறவேண்டும் என்ற தன்னுடைய ஆட்டிட்யூடால் அணியின் செயல்பாட்டையும் பல மடங்கு அதிகரிக்கும் வீரர் இவர். கிளப் கால்பந்தில் எந்த அளவுக்கு சாதனை படைத்திருக்கிறாரோ அதே அளவுக்கு சர்வதேச கால்பந்திலும் பல சாதனைகள் படைத்திருக்கிறார் சி.ஆர்.7!
போர்ச்சுகல் அணிக்காக அண்டர் 15, அண்டர் 17, அண்டர் 20, அண்டர் 21, அண்டர் 23 என ஒவ்வொரு பிரிவிலும் விளையாடியிருக்கும் அவர், சீனியர் அணியில் 18 வயது இருக்கும்போதே அறிமுகமாகிவிட்டார். 2004 யூரோ தொடருக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், கிரீஸ் அணிக்கான குரூப் போட்டியில் தன் முதல் சர்வதேச கோலை அடித்தார். அன்று தொடங்கிய அந்த கோல் மழை இன்றுவரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
2004 யூரோ கோப்பையில் 2 கோல்கள். 2006 உலகக் கோப்பையில் 1 கோல். 2008 யூரோ, 2010, 2014 வேர்ல் கப் ஆகிய 3 தொடர்களிலும் தலா 1 கோல். 2012 யூரோவில் 2 கோல்கள் என ஒவ்வொரு தொடரிலும் தவறாமல் கோல் அடித்துக்கொண்டே இருந்தார். இருந்தாலும் போர்ச்சுகலால் ஒரு கோப்பையை வெல்ல முடியவில்லை. கிளப் அளவில் பல்வேறு சாதனைகள் படைத்தவருக்கு அது பெரும் குறையாக இருந்தது. ஆனால், 2016 யூரோவில் அதையும் வென்றார். அந்தத் தொடரில் 3 கோல்கள் அடித்த ரொனால்டோ, கேப்டனாக தன் அணியை, வீரர்களை நன்றாக வழிநடத்தினார். சுமாரான அணி, அவரது கோல்களால்… ஏன் அவர் இருந்ததாலேயே பலமடங்கு பலமடைந்தது.
Euro 2020: பொங்கிய உணர்வுகளின் நடுவே பெல்ஜியம் கொடுத்த அசத்தல் கம்பேக்!
2018 உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே சாம்பியன் ஸ்பெய்னுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார் ரொனால்டோ. மொராக்கோவுக்கு எதிராகவும் கோல் அடித்து, 4 கோல்களோடு அந்த உலகக் கோப்பையை நிறைவு செய்தார். 2019 UEFA நேஷன்ஸ் லீகில் ஸ்விட்சர்லாந்துக்கு எதிராகவும் ஒரு ஹாட்ரிக். அந்தத் தொடரையும் வென்றது போர்ச்சுகல்.
இப்போது அவருக்கு 36 வயது. இருந்தாலும், அவரது தாக்கம் கொஞ்சம்கூடக் குறையவில்லை. இந்த யூரோவின் முதல் போட்டியிலேயே ஹங்கேரிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்தார். அந்தப் போட்டியில் களமிறங்கியபோது அதிக யூரோ தொடர்களில் விளையாடியவர் என்ற சாதனை படைத்த கிறிஸ்டியானோ, அந்தப் போட்டி முடியும்போது யூரோவில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பிளாடினியின் சாதனையை முறியடித்திருந்தார். ஜெர்மனிக்கு எதிரான அடுத்த போட்டியில் ஒரு கோல் அடித்தவர், பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்தார். அதன்மூலம், சர்வதேச அரங்கில் 109 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்த அலி தாய் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
இன்னும் ஒரு கோல் அடித்தால், தனி ஆளாக முதலிடம் பிடித்து தன் பெயரில் இன்னொரு சாதனையை வசப்படுத்திவிடுவார் இந்த போர்ச்சுகல் ஜாம்பவான்!