November 25, 2024

பொருளாதாரத்தில் இலங்கை முன்னேற்றடைய தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியம் என்கிறார் நியமன எம்பி சுரேன் ராகவன்

இலங்கை வாழ் அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும்.பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றடைய வேண்டும் என்ற இலக்கில் தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியமாக இருத்தல் வேண்டும். ஆகவே தேசிய நல்லிணக்கத்தை அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுத்தும் என தான் நம்புவதாக அரசாங்க சார்பு நியமன எம்பியான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

பல் மொழி சார்ந்த ஊடகங்கள் மத்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மத்தியில் காணப்படும் சிறை கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரத்திற்கான தீர்வு, காணி விடுவிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வு எதிர்வரும் மாதம் தொடக்கம் சாதகமான முறையில் வழங்கப்படும்.

ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடற்ற வகையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்வது எமது பிரதான இலக்காகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

நீண்டகால தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளமை இலங்கை தமிழ் அரசியலில் ஒரு திருப்புமுனையாகவே கருத வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த யோசனையை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் தலைமைகள் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுத்துள்ளனவா என்பதை ஏற்க முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் தமது அரசியல் பிரவேசம் கேள்விக்குறியாகும் என்று எண்ணுகிறார்களா என்று கருதத் தோன்றுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 106 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளார்கள். இவர்களை விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட தனியார் காணிகளில் 97 சதவீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. மிகுதி 3 சதவீதமான காணி விடுப்பு குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனோர் விடயத்திற்கு ஒரு தீர்வு காண்பது அவசியமாகும். இவை ஜனநாயக ரீதியிலும் முரண்பாடற்ற வகையிலும் ஆராயப்பட வேண்டும். மிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்றில் உரையாற்றும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அரசாங்கத்தையும், என்னையும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவையும் சுட்டிக்காட்டி சவால் விடுத்தார். அவரது சவாலை வெற்றிக்கொண்டுள்ளோம்.

சவாலில் தோல்வியடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பாடசாலைக்கு 5 ஆம் தரம் வரை சென்ற ஒருவர் நன்கு அறிவார். ஆகவே அவர் அதனை சுமந்திரன் அவர்கள் செய்வார் என எதிர்பார்க்கிறோம்” என்றார் சுரேன் ராகவன்