யாழில் மீண்டும் முடக்கம்?
உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்தின் கரணவாய் மற்றும் கரவெட்டியின் ஒருபிரிவு முடக்கப்பட்டள்ளது.
யாழ்ப்பாணம் – கரணவாய் கிராமசேவகர் பிரிவிலுள்ள பகுதியொன்றே இன்று (25) அதிகாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.
கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜே- 350 கரணவாய் கிராமசேவகர் பிரிவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது. அங்கு, சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கிராமும் முடக்கப்பட்டுள்ளது.
நாடளாவியரீதியில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிலேயே 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.