November 21, 2024

மரவள்ளியை அவித்து உண்ணும் யுகம் விரைவில்?

அரசாங்கத்தால் தற்போது எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கமைய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியைப் போன்று மரவள்ளி கிழங்கை அவித்து உண்ணும் யுகம் உருவாகக் கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலை அதிகரிப்பு, உரம் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றோடு கொவிட் தொற்றின் காரணமாக நாடு இன்று பாரதூரமான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

உரப்பற்றாக்குறையால் தாம் விவசாயத்தை கைவிடப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளார்.

அவ்வாறு விவசாயம் கைவிடப்படுமாயின் நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும்.

அரிசி மாத்திரமின்றி பாரியளவில் டொலர் வருமானத்தை ஈட்டித்தரும் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்படும்.

தேயிலை தூள் ஏற்றுமதி குறைவடையுமாயின் அது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அரசாங்கம் தற்போது செயற்படும் முறைமை தொடருமாயின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் மரவள்ளி கிழங்கை அவித்து உட்கொண்ட யுகத்திற்கு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நினைவுபடுத்துகின்றோம்.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என்றார்.