தன் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய தற்கொலையாளியை மன்னித்த சரத் பொன்சேகா
குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன் 15 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறையில் இருக்கிறார் அவருக்கு அந்தத் தண்டனையே போதுமெனவும் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‚ஒரு தடவை நான் வழக்கு விசாரணைக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன்.
நீதிமன்றத்தில் எனக்கு அருகில் மற்றொரு இளைஞரும் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் மொரிஷ்.
என் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய தற்கொலை தாரியை அழைத்து வந்த வாகனத்தின் சாரதியே அந்த இளைஞன்.
நான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தபோதே, என் மீதான தாக்குதலை நடத்திய இளைஞரும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
அந்த இளைஞருடன் தற்போதும் தொலைபேசியில் பேசுவேன்.” எனவும் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடத்துக்குப் பின்னர் தாக்குதலுடன் தொடர்புடைய மொரிஸ் கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது 15 வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறைச்சாலையில் இருக்கிறார். அவருக்கு அந்தத் தண்டனையே போதும் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.