திருச்சி சிறையில் ஈழத்தமிழர்கள் 9 ஆவது நாளாக போராட்டம்!
தமிழ் நாடு திருச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தொடர்ந்து 9 ஆவது நாளாக இன்று (17) கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழ் அகதிகள் கடந்த 9 ஆம் திகதி தங்கள் விடுதலையினை வலியுறுத்தி போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
குறித்த போராட்டம் 9 ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டவர்கள் நீதிமன்ற பிணையில் வந்தவர்களை கைது செய்து மேலும் சிறப்பு முகாமில் காலவரையின்றி எந்த விதமான நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருக்கின்றார்கள்.
அவர்கள் குடும்பங்களுடன் இருந்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
குறித்த கடிதத்தில் முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளுமாறும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழர்களின் விடுதலையை துரிதப்படுத்தக் கோரியும் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.