யாழிலில் ஊசி சுருட்டல் விவகாரம்:கொழும்பில் விசாரணை!
யாழ்ப்பாணத்தில் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட திருநெல்வேலி, பாற்பண்ணைக்கு ஒதுக்கப்பட்ட ஊசிகளை சுருட்டிக்கொண்ட விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
அரசியல் தரப்பிற்கு ஆதரவாக ஊசியை மாற்றிக்கொண்ட வடமாகாண சுகாதார அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ளவேண்டியிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இத்தகைய குற்றச்சாட்டுக்கள் மத்தியில் தென்னிலங்கையில் அதிகாரிகள் சிலர் கதிரைகளை இழந்திருந்த நிலையில் இவ்விவகாரம் வடக்கிலும் சூடுபிடித்துள்ளது.
இதனிடையே ஊசியை மாற்ற காரணமான அமைச்சரோ அப்பகுதி மக்களுக்கு, விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்துள்ளார்.
யாழ். மாவட்ட மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் அண்மையில் வழங்கப்பட்டபோதும், அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பாற்பண்ணைக் கிராமத்துக்கு தடுப்பூசி வழங்கப்படாதமை குறித்து, அந்தக் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்துக்கு அடுத்த தொகுதி தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்போது பாற்;பண்ணை கிராமத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், அரச அமைச்சர் டக்ளஸ் உறுதியளித்துள்ளாராம்.