கோத்தா சாதனை:விற்பனையில் காங்கேசன்துறை காணிகள்!
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற செலன்திவ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.
யாழ். மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், இந்திய முதலீட்டில் விஸ்தரிக்கப்பட்ட பலாலி விமான நிலையத்திலிருந்து சுமார் 5.5 கிலாமீட்டர் தொலைவிலும் கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் அமைவிடம் உள்ளது.
செலன்திவ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்து அபிவிருத்தியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள, காங்கேசன்துறையிலுள்ள சர்வதேச இணைப்பு நிலையம் அமைந்துள்ள 5 ஏக்கர் பகுதி முதலீட்டுக்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தொடர்ந்தும் கடற்படையினரின் வசமுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் எனும் பெயரில் இலங்கை முதலீட்டு சபை ஏலத்தில் வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.