November 21, 2024

ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட பல இலங்கைத் தமிழர்கள்

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கை தமிழர்கள் பலர்  நாடு கடத்தப்பட்டுள்ளதாக

தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராங்பேட் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கைக்கு
நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சுமார் 20 தொடக்கம் 25 வரையான இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்த சரியான விபரங்கள் இதுவரையில்
வெளியாகவில்லை. இவர்கள் நாளைய தினம் இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜேர்மனியில் புகலிடம் கோரிய 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு
நாடு கடத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், சுமார் மூன்று மாத கால இடைவெளியில் இன்று
மேலும் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நாடு கடத்தப்படும் சம்பவங்கள் ஜேர்மனியில் இனியும் தொடரக் கூடும் என
அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில், துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில், தமிழ்
அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்த அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நாடுகடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராங்பேர்ட் விமான
நிலையத்தில் பெரும் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தமிழர்கள், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் பிற மனித உரிமை அமைப்புகளின்
ஆர்வலர்களுடன் சுமார் 70 மணி நேரத்திற்கும் மேலாக நாடு கடத்தும் நடவடிக்கையைத் தடுக்கும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.