தியாகிகளே:மூன்றாம் தர பிரஜைகள் அல்லர்:யாழ்.ஊடக அமையம்
உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர்கொடுத்த ஊடகவியலாளர்களை மூன்றாம் தரத்தில் பணிப்புரிந்த ஊடகவியலாளர்கள் என சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் வெளியிட்டுள்ள கருத்திற்கு யாழ்.ஊடக அமையம் வன்மையான கண்டனங்களை பதிவு செய்துகொள்கின்றதென இன்றிரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் கீழ் தரமாக பணியாற்றிய ஊடகவியலாளர்கள்‘ என சுகாதார அமைச்சின் பிரதிநிதியாக மருத்துவர் ஹேமந்த ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
தாம் சார்ந்த மக்களிற்காக வடகிழக்கிலும் கொழும்பிலுமாக 39 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமலோ கடந்த காலங்களில் ஆக்கப்பட்டுள்ளனர்.
கூலிக்காக மாரடிக்கும் மருத்துவர் ஹேமந்த ஹேரத் போன்றவர்களை தாண்டி உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக களப்பலியான ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் மற்றும் நிந்திக்கும் விதத்தில் கருத்துக்களை எவரும் முன்வைக்க அருகதையற்றவர்களென யாழ்.ஊடக அமையம் கருதுகின்றது.
ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைகள் மற்றும் ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை ,தாக்கப்பட்டமைக்கு இன்று வரை நீதி கிடைக்காமைக்கு பிரதான காரணமாக அமைவது ஆட்சியாளர்களிற்கு வளைந்து கொடுக்காமையும், நீதி விசாரணை தொடர்பில் முன்னிறுத்த பின்னடிப்பதேயாகும்.
கடந்த ஜூன் 3 ம் திகதி சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நிகழ்ந்த செய்தியாளர் மாநாட்டை தொடர்ந்து, சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் என்ற ரீதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து ஊடக சமூகத்தின் மத்தியில் மிக்க சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக களப்பலியான ஊடக நண்பர்களிற்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையம் சமரசமின்றி நீண்டகாலமாக போராடிவருகின்றது.
இந்நிலையில் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்த கருத்துக்கள் எம்மையும், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
அரசின் ஒரு பொறுப்பான அதிகாரியாக தெரிவித்த கருத்து அரசினது கருத்தாகவே கருதப்படுவதால் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியாலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமும்,ஊடக சமூகத்தினரிடமும் பொறுப்பு கூறவேண்டியவராக மருத்துவர் ஹேமந்த ஹேரத் உள்ளார் என்பதை யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டவிரும்புகின்றதென ஊடக வெளியீட்டு பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.