இலங்கையரால் முடங்கிய மெல்பன் நகர்
அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் பரவிய கொவிட்-19 வைரஸானது, இலங்கையர் ஒருவரின் ஊடாகவே பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம் கொண்ட டெல்டா கொவிட் வைரஸ் கொத்தணி காரணமாக, அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகர், இரு வாரங்களுக்கு முடங்கியது.
இந்த கொத்தணி காரணமாக பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 8ம் திகதி இலங்கையிலிருந்து பயணித்த ஒருவரின் ஊடாக, இந்த புதிய டெல்டா கொவிட் கொத்தணி அவுஸ்திரேலியாவில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார தரப்பினரை மேற்கோள்காட்டி, 7NEWS செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் 40 வயதான இலங்கையர் ஒருவரின் ஊடாகவே இந்த வைரஸ் பரவியுள்ளது. குறித்த நபருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மே மாதம் 9ம் திகதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, மே மாதம் 23ம் திகதி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரின் ஊடாகவே வைரஸ் பரவியுள்ளமை, விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பின்னணியில், வெளிநபருக்கு எவ்வாறு இந்த வைரஸ் தொற்றியது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.