November 21, 2024

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.

இதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த மாவட்டங்களில் மளிகை கடைகள், காய்கறி, பழக்கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் இன்று திறந்து இருந்தன.

இறைச்சிக்கூடங்கள், மீன் சந்தைகள் ஆகியவை மொத்த விற்பனைக்காக மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன.

சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 சதவீத டோக்கன் அனுமதிக்கப்பட்டு பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்பட்டன. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின.

மேற்கண்ட 11 மாவட்டங்களை தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதன்படி காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன்விற்பனை கடைகள் இன்று காலையில் வழக்கம் போல இந்த மாவட்டங்களில் செயல்பட்டன.

 

இதையும் படியுங்கள்… தமிழகத்தில் கூடுதல்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது

குறிப்பாக சென்னையில் கடைகளை திறப்பதற்கு அதிகாலையிலேயே வியாபாரிகள் தயாரானார்கள். சரியாக 6 மணிக்கு கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.

சென்னையில் இன்று காலை 6 மணிக்கு அனைத்து மளிகைக்கடைகள், காய்கறிக் கடைகள், சாலையோரங்களில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு இருந்தன. கரும்பு ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் கடைகளும் திறந்து இருந்தன.

இந்த கடைகளில் நடைபயிற்சி சென்றவர்கள் நின்று ஜூஸ் அருந்தியதையும் காண முடிந்தது. இதனால் சென்னையில் இன்று காலை ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி இருந்தது.

காசிமேடு, பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுகள் திறந்து இருந்தன. மீன்களை மொத்தமாக வாங்கி செல்வதற்கு வியாபாரிகள் குவிந்து இருந்தனர். இறைச்சிக் கூடங்களும் செயல்பட்டன.

அரசு அலுவலகங்கள் 30 சதவீதம் அளவுக்கு செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் சென்னை உள்பட 27 மாவட்டங்களிலும் இன்று பலர் காலையிலேயே புறப்பட்டு வேலைக்கு சென்றதையும் காண முடிந்தது.

எலக்ட்ரிக்கல் பொருட்கள், பல்புகள், கேபிள் ஒயர்கள், சுவிட்சுகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் எலக்ட்ரிக்கல் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. இதையடுத்து இந்த கடைகளும் இன்று காலையில் திறந்து இருந்தன.

மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள் ஆகியவைகளை பழுதுபார்க்கும் கடைகளும் திறந்து இருந்தன. இந்த கடைகளில் இரு சக்கரவாகனங்களை பஞ்சர் ஒட்டுவதற்கும், பழுது பார்ப்பதற்கும் பலர் திரண்டு இருந்ததை காண முடிந்தது.

வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவையும் திறந்து இருந்தன.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பழுது பார்க்கும் சர்வீஸ் சென்டர்களும் திறக்கப்பட்டு இருந்தன.

கடந்த 2 வாரங்களாக மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் மூடப்பட்டு இருந்ததால் நடமாடும் காய்கறி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பலரும் வாகனங்களில் சென்று காய்கறி மற்றும் பழங்களை பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. இதையடுத்து நடமாடும் காய்கறி கடைகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இன்று காலையில் வழக்கம்போல காய்கறி வண்டிகள் அதிகளவில் சாலையில் சென்றதை காண முடிந்தது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில் போலீசாரும் தீவிரமாக கண்காணித்து தேவையின்றி வெளியில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில் ஊரடங்கில் செய்யப்பட்டுள்ள தளர்வுகளால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களும் 2 வாரங்களுக்கு பிறகு இன்று பரபரப்பாக காணப்பட்டது.

கடைகளை திறப்பதற்காக அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களது வாகனங்களில் காலையிலேயே கடைக்கு சென்றனர். இதனால் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி கிடந்த சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. மக்கள் நடமாட்டமும் கூடுதலாகவே இருந்தது.

இதையடுத்து மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கிறார்களா? முகக்கவசம் அணிந்துள்ளார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்தனர்.

அதுபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.