November 22, 2024

நமோ நமோ சீனா! இனி எல்லாம் சீனா! பனங்காட்டான்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் முக்கியமான ஒன்று. நாடளாவிய ரீதியில் ஆறில் ஐந்து கணக்கில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது.பிரித்தானியாவிடமிருந்து இலங்கை விடுபட்ட பின்னர் உருவான டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான முதலாவது அரசாங்கத்தில் நிதி அமைச்சரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அதற்கு முன்னரே சட்ட சபை உறுப்பினராகவும் இருந்தவர்.

1906ம் ஆண்டில் பிறந்த இவர் தமது 71வது வயதிலேயே – தமது முதுமையை எட்டிய பின்னரே பிரதமர் பதவிக்கு வர முடிந்ததை வரலாற்றாளர்கள் பலவாறு விமர்சித்துள்ளனர். 1978ல் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, தேர்தல் இல்லாமலே தம்மை சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட ஜனாதிபதியாக்கினார்.

சனநாயகத்தை எவ்வாறு சர்வாதிகாரமாக்கலாம் என்பதை செயல்வழியாக மக்களுக்குக் காட்டிய ஜே.ஆர்., வயோதிபத்தை எட்டிய தமது 83வது வயதுவரை (1989) ஜனாதிபதியாகவிருந்து, சகல சனவிரோத செயற்பாடுகளையும் அறிமுகப்படுத்திவிட்டு கட்டாய ஓய்வுக்குச் சென்றார். கிழட்டு நரி என்ற பட்டத்துடன் ஏழாண்டுகள் அதன்பின் அவரால் உயிர்வாழ முடிந்தது.

சர்வாதிகாரத்துக்கு தர்மிஸ்டர் என்ற பெயருண்டு என்ற விசித்திரத்தை இவரது ஆட்சிக்காலம் போதித்தது. இவரும் சரி, இவர் பின்னால் தலைமைப் பதவியை கைப்பற்றியவர்களும் சரி குறுகிய காலத்துக்குள் மக்கள் எதிர்ப்பைச் சந்திக்காத தந்திரமான ஆட்சியை கடத்திச் சென்றனர்.

சர்வாதிகாரத்துக்கு இன்னொரு ஜே.ஆராக விளங்கும் கோதபாய ராஜபக்ச, அந்தக் கதிரையில் ஏறிய ஒன்றரை வருடங்களுக்கிடையிலேயே மக்கள் விரோதியாக மாறி, அவரைத் தெரிவு செய்த சிங்கள மக்களாலேயே வெறுக்கப்படுகின்றவராகியுள்ளார் என்பது நாட்டின் வரலாற்றுப் பதிகையாகியுள்ளது.

தமது கதிரையைச் சுற்றி பல வலயங்களை இவர் உருவாக்கினார். ஒன்று – சகோதரர்கள் மற்றும் அவர்களின் பிள்ளை குட்டிகள் உறவினர்களாலானது. அடுத்தது – ராணுவத்தைத் தலைமையாகக் கொண்ட நம்பிக்கையான படைத்துறையினரைக் கொண்டது. மற்றது – தமக்கு ஏவலாளர்களாக இயங்கக்கூடிய அடிவருடிகள் கூட்டத்தை உள்ளடக்கியது. இவை தவிர வேறு சில சின்னச்சின்ன வலயங்களும் மறைப்புக்குள் உண்டு.

எனினும், விரும்பியவாறு திட்டமிட்டவாறு கட்டமைக்கப்பட்டவாறு எதனையும் செய்ய முடியாத ஒருவகை நெருக்கடிகள் அவரின் தலைக்குமேல் அடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அப்படி இப்படியாக (பதவிகள், சன்மானம், சலுகைகள்) பெற்றுள்ளாராயினும், புறநிலையில் உருவாகி வரும் புதுப்புது நெருக்கடிகள் அகநிலையில் இருப்பினை நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

இலங்கையின் கடல் எல்லைக்குள் தீப்பிடித்து மூழ்கிப்போன எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பற்றிய பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அதற்குள்ளிருந்த எரிபொருள் கொள்கலன்கள், அது தீப்பற்றிய விதம், அதனை அணைக்க சர்வதேசம் முன்வராத காரணம் போன்றவைகள் தவிர இன்னும் பலவுண்டு. நாட்டின் கடல் வளம், மண் வளம், பொருளாதாரம் என்பவை பாதிக்கப்பட்டுள்ளன. இக்கப்பல் எரிந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகை தடைபடப் போகிறது என்று அமைச்சர் ஒருவர் ஏற்கனவே கூறிவிட்டார்.

இதற்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்று உருவாக்கப்படும். அக்குழுவின் அறிக்கை கையளிக்கப்படும். பின்னர் அது அப்படியே குளிர்சாதனப் பெட்டிக்குள் புகுந்துவிடும். கப்பல் வந்த வேலையும் முடிந்துவிடும். இதுதான் இலங்கையின் காலாதிகால வரலாறு. கப்பல் எரிந்த ரிசிமூலம் இரண்டு நாடுகளின் உயர்மட்டங்களுக்கு மட்டுமே ரகசியமாக இருப்பதாக பேசப்படுகிறது.

அரச நிர்வாகங்களில் படையினரை நியமித்து வந்த தடத்தில், இப்போது சில நீதி விசாரணைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. போர்க்காலத்தில் பொலிஸ் மாஅதிபராக இருந்த சாந்தகுமார விக்கிரமரட்ண காணாமலாக்கப்பட்டோர் சம்பந்த விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஒரு பதவி கொடுக்க வேறு குழுவொன்றும் கிடைக்கவில்லை போலும்!

கள்வனைக் கண்டுபிடிக்க கள்வனை நியமிப்பது போன்ற செயற்பாடு இது. காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கையில் மட்டும்தான் நீதிக்கான விசாரணை என்ற பெயரில் இவ்வாறான அநீதிகள் இடம்பெறும். சர்வதேசம் கேட்கும் அனைத்துலக நீதிவிசாரணை பொறிமுறையை மறுக்கும் இலங்கை அரசு, அதற்குச் சவாலாக இவ்வாறு நியமனம் செய்து இடைக்கால நீதிப் பொறிமுறையை பாழாக்குகிறது என்று சாடியுள்ளார் இத்துறைசார் நிபுணர் ஜஸ்மின் சூக்கா.

சமவேளையில், அமெரிக்க காங்கிரஸ் என அழைக்கப்படும் சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 46-1 இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நீதி விசாரணையைக் கோருவதை வலுவூட்டும் வகையில் இந்தத் தீர்மானம் வரையப்பட்டுள்ளது.

ஜெனிவாத் தீர்மானத்தின் சகல அம்சங்களையும், மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிய அனைத்து சமர்ப்பணங்களையும் முழுமையாக ஆதரித்துள்ள இந்தத் தீர்மானம், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பாரம்பரிய தாய்மண் (North Eastern region of the country, traditional Tamil homeland) என்று குறிப்பிட்டிருப்பதை இலங்கை ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் எதனை மறுத்துரைத்து வந்தார்களோ அது அமெரிக்க முன்றலில் தீர்மானமாக வந்துள்ளதால் துடிக்கின்றனர், பொங்கி எழுகின்றனர்.

இதனைச் சும்மா விடப்போவதில்லை. அமெரிக்க காங்கிரசுக்கும், அதன் வெளியுறவுக் குழுவுக்கும் இதனைக் கண்டித்து கடிதம் அனுப்பப் போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அரசு, புலிகளை மீளெழுச்சி கொள்ளச்செய்யும் செயற்பாடு இதுவென வழமைபோல மாலை சூட்டியுள்ளது.

இலங்கையை சீனாவுக்கு அடகு வைப்பது போன்று கொழும்பு துறைமுக நகரை அதற்குத் தாரை வார்க்கும்போது, பின்னால் இப்படியெல்லாம் நடைபெறுமென்பதை இலங்கை புரிந்திருக்க வேண்டும். சீனா வழங்கும் கோடானுகோடி கடன், பின்னால் வரப்போவதை எண்ணிப் பார்க்கவிடாது மறைத்துவிட்டது.

உள்நாட்டுக்குள் சீனா என்றால், வெளியுலகில் அமெரிக்கா தனது கூட்டு நாடுகளோடு சேர்ந்து (பிரித்தானியா கனடா போன்ற) பிறிதான ஒரு பாதையில் தனது பயணத்தை தொடரும் என்பதை ஆட்சித் தரப்பினர் நினைக்கத் தவறி விட்டனர்.

இது தவிர, கொரோனா நெருக்கடி நாட்டின் மையத்தில் நின்று அனைவரையும் உலுப்புகிறது. இதற்கும் சீனாவிடமே தடுப்பூசி வாங்கும் நிலைமை தவிர்க்க முடியாது போய்விட்டது.

மருத்துவர்கள் குழு கையாள வேண்டிய நோய்த்தடுப்பை ராணுவத்தளபதி சவேந்திர சில்வா தலைமையிலான குழு கையாளப் போனதால் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். கண்ணுக்குப் புலப்படாத நோய்க்கிருமியை குண்டு போட்டும், துப்பாக்கியால் சுட்டும், வானத்திலிருந்து எரிபொருள் வீசியும் அழிக்கலாமென கோதா – சவேந்திரா ராணுவக் கூட்டுமூளை எண்ணியதன் விளைவை நாடு இப்போது சந்தித்துள்ளது.

இந்தவேளை பார்த்து, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்தை பகிரங்கமாகச் சாடி அறிக்கை விட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் ஆட்சித்தரப்பு அரசியல்வாதிகளுக்கு பங்கு இருப்பதை முதன்முறையாக பேராயர் பகிரங்கப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் ஓய்வு பெற்ற இலங்கையின் சட்டமா அதிபர் (இவர் ஒரு கத்தோலிக்கர்) இத்தாக்குதலின் விசாரணை அறிக்கையை முழுமையாக ஏற்க மறுத்தபோதே, பின்னால் பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டதை பேராயரின் அறிக்கை தெரியப்படுத்துகிறது.

சுபீட்சமான எதிர்காலம் எனக்கூறி நம்பவைத்து வாக்குப்பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களை ஏமாற்றிவிட்டனர் என்று நேரடியாக கோதபாயவையும், ராஜபக்சக்களையும் நோக்கி விரல் நீட்டியுள்ள மல்கம் ரஞ்சித், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்காவிடின் சர்வதேச நிறுவனங்களை நாட வேண்டிவரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை காலமும் சிங்கள அரசாங்கங்களின் சுவீகார குடும்ப நண்பராகவே இருந்த பேராயர், இப்போதுதான் அவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டார் போலிருக்கிறது. இவரது கூற்று நடிப்பா உண்மையா என்பதை அறிய சில காலம் காத்திருக்க வேண்டிவரும்.

இலங்கைக்குள் கால்களைப் புதைத்து கைகளை நீட்டி அகலமாக்கி, தெற்கில் இருந்து வடக்குவரை தன்னை வியாபித்து தனது இருப்பை நிலைநிறுத்தி தனது மொழியையும் இலங்கையின் அரசகரும மொழியாக மாற்றியுள்ள சீனாவின் செயற்பாடுகளை, சிங்கள ஆங்கில ஊடகங்களும், சிங்களப் புத்திஜீவிகளும் இப்போது பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளதை இங்கு தவறாது குறிப்பிட வேண்டும்.

கொழும்பின் அதிமூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் லூசியன் ராஜகருணநாயக்க. லேக்ஹவுஸ் வெளியீடான டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இவர் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு ஐலன்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு வரி நிச்சயம் முக்கியமானவர்களின் பார்வைக்கு உட்பட்டிருக்கும்.

இலங்கையின் தேசிய கீதமான நமோ நமோ மாதா என்பது விரைவில் நமோ நமோ சீனா ஆகலாம் என்று லூசியன் எழுதியிருப்பதை வெறும் விகடமாகப் பார்க்க முடியவில்லை.

இதற்கு உடந்தையாக, அதே ஐலன்ட் பத்திரிகை ஒரு கார்ட்டூனை (கருத்துச் சித்திரம்) பிரசுரித்துள்ளது. சீனாவின் அதிகாரபூர்வ சின்னமான ட்ரகன் பொறிக்கப்பட்ட கொடியை மகிந்தவும் கோதபாயவும் கைகளில் உயர்த்திச் செல்வதாக இக்கருத்துச் சித்திரம் வரையப்பட்டுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் இலங்கையின் தேசிய கீதத்தை பாட மறுத்துவரும் சிங்கள தேசம், நமோ நமோ சீனா என தங்கள் தேசிய கீதத்தை தாங்களே பாட நேருமென்று, அவர்களின் இனம்சார் ஊடகவியலாளர் ஒருவரின் பார்வையை வெறும் கருத்துருவாக்கமாகப் பார்க்கக்கூடாது.

இதனை ஆய்ந்து ஓய்ந்து அணுக வேண்டிய முக்கியத்துவத்தை ஆட்சியில் இருப்பவர்கள் உணரத் தவறின், புறநிலையில் உருவாகி வரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாது போகும். ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடத்துள் அவர்களை கதிரையில் ஏற்றியவர்களே இறக்க வேண்டிய செயற்பாட்டுக்கு உள்ளக நிலைமையும் உருவாகலாம்.