November 24, 2024

ஜேர்மனியின் நாடுகடத்தல் செயற்பாட்டுக்கான அறிவுறுத்தல்.

அன்பான உறவுகளே…!

வணக்கம்!

இன்றைய COVID-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் உலகமே முடங்கிப் போய் இயங்கு நிலையற்று இருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசு புலம்பெயர்ந்து வந்து ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களாகிய  எமக்குமீண்டும் மீண்டும் துன்பத்தை விளைவிக்கும் செயற்பாடுகளைத் தொடர்கின்றது.

இன்றைய காலத்தில் இலங்கையை ஆளும் இனவழிப்பு அரசினால், திட்டமிட்டு  இரகசியமாகத் தொடரப்படும்கொடூரமான இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக பிறந்த ஊரைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து, அகதிகளாக இங்கு வந்து, ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்து கோரிக்கை வைத்துக்காத்திருந்த எம் உறவுகள் சிலரை  கடந்த 30.03.2021 அன்று கைது செய்து சிறப்புத்தடுப்பு முகாம்களில் தடுத்துவைத்திருந்தது மட்டுமல்லாது, அவர்களை Düsseldorf சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்புக்குநாடு கடத்தி இருந்தது பெரும் வேதனையை எமக்குத் தந்திருந்தது.

இதனைத் தடுப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை எடுத்ததும், எம் உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்புமுகாம்களுக்கு முன்பாக பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததும் நீங்கள் அறிந்ததே. இருப்பினும் எம்மால் 4 பேரைத் தவிர ஏனைய அனைத்து உறவுகளைக் காப்பாற்ற முடியாமல் போனது எம் துர்ப்பாக்கியமே.

இந்த நிலையில்,

இவ்வாறான நாடுகடத்தல் செயற்பாட்டை தொடர்ந்தும் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அம் முயற்சியில் ஜேர்மனிய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இருநாட்களாக ஜேர்மனியில், குறிப்பாக Baden-württemberg மாநிலத்தில் Duldung வகை வாழ்விட அனுமதிபத்திரத்தோடு வாழ்ந்து வந்த ஈழத்தமிழர்கள் சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது எதிர்வரும் நாட்களில்  பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் விமானத்தின் ஊடாக இவர்கள்நாடுகடத்தப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது உண்மையானதகவலாக இருக்கலாம் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதை உறுதிப்படுத்த நாம் தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கின்றோம். அவ்வாறு இந்த நடவடிக்கை உண்மை எனில் எதிர்வரும் நாட்களில் இவ்வாறான கைதுநடவடிக்கைகள் அதிகமாகத் தொடரலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதனால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது முக்கியமாகின்றது.

அன்பானவர்களே!

Duldung வகை வதிவிட அனுமதியை வைத்திருப்பவர்கள் இந்த நடவடிக்கையை கவனத்தில் கொண்டுஉடனடியாக உங்களின் வழக்கறிஞர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உங்களை இந்த நாடுகடத்தல்செயற்பாட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழிமுறைகளைத் தேடுங்கள். இப்போது எம்மால் முடிந்தஉடனடி நடவடிக்கை இதுவென்றே கருதுகின்றோம்.

உங்களுக்குச் சட்டரீதியாக ஏதாவது உதவிகள் தேவைப்படும் எனில் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள். எம்மால் முடிந்தவரை உங்களுக்காக உதவக் காத்திருக்கின்றோம்.

நன்றி 

ஈழத்தமிழ் மக்களவை – ஜேர்மனி

தொடர்புகளுக்கு 

விபீஷனன் : +49 176 41313331

சங்கர்: +49 176 21751446