யாழில் கொரோனா தடுப்பூசியை காணோம்:தேடுதல் மும்முரம்!
யாழ்.மாவட்டத்திற்கென ஒதுக்கி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்படி நேற்றைய நாள் முடிவில் 3 ஆயிரத்து 68 தடுப்பூசிகள் மீதம் உள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் மதியத்துடனேயே 50ஆயிரம் ஊசிகளும் முடிவடைந்துவிட்டதாக மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50,000 தடுப்பூசிகளில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு என 2760 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 1010 தடுப்பூசிகளே வழங்கப்பட்டன.
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் அட்டவணைப்படி சங்கானை பிரிவில் மூன்று நாள்கள் தடுப்பூசி ஏற்றுவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
1. வட்டுக்கோட்டை வைத்தியசாலை – 1010 தடுப்பூசிகள்,
2. சுழிபுரம் மத்தி – 850 தடுப்பூசிகள்
3. பனிப்புலம் – 900 தடுப்பூசிகள்.
இவற்றில், முதல் தடவை பெறப்பட்ட தடுப்பூசிகளில் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் இரு நாள்களாக 464 தடுப்பூசிகளே ஏற்றப்பட்டன. எஞ்சிய 546 தடுப்பூசிகளுடன் இரண்டாவது இடமான சுழிபுரம் மத்தியில் தடுப்பூசி ஏற்றல் ஆரம்பமாது.
ஆனால் இரண்டாம் தடவைக்கான தடுப்பூசியை சுகாதார வைத்திய அதிகாரி பெற்றுக்கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில், நேற்று (02) மதியம் 1.00 மணிக்கு பின்னர் தடுப்பூசிகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்தது என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
ஆக, மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை, சுகாதார வைத்திய அதிகாரியிடம் கேட்டகாமல் சுகாதாரத் திணைக்களம் கைமாற்றியதா? அல்லது, சுகாதார வைத்திய அதிகாரியின் சம்மதத்துடன் தடுப்பூசிகள் கைமாற்றப்பட்டனவா? சுகாதாரத்துறை அதிகாரிகள் பதிலளிக்கவேண்டும் என முன்னணி சமூக செயற்பாட்டளர் கேள்வி எழுப்பியுள்ளார்.