8 வயதில் கோவை குப்பைத் தொட்டியில் உரங்கிய ஷாஸ், இன்று கனடா கோடீஸ்வரர் ஆன கதை!
கோடீஸ்வரராக இருக்கும் நாயகன் ஒரே நாளில் குடிசைக்கு போகும் அளவிற்கு பிரச்சினை வரும் அல்லது குடிசையிலேயே பிறந்து வளர்ந்த நாயகனுக்கு பணக்காரர் ஆகியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும். எது எப்படியோ ஒரே பாட்டில் வியர்வை சிந்தி, கஷ்டப்பட்டு பணக்காரராகி விடுவார் நாயகன். இது நாம் பார்த்து பார்த்து பழக்கப்பட்ட தமிழ் சினிமா டெம்ப்ளேட் தான்.
ஆனால் இது சினிமாவில் வரும் காட்சிகள் மட்டுமல்ல… நமக்கு தெரியாத நிஜ வாழ்க்கை நாயகர்கள் நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள்.
என்ன ஒரு வித்தியாசம், சினிமாவில் வருவது போல், ஒரே பாட்டில் அவர்களது வாழ்க்கை மாறி விடுவது இல்லை. அவர்களது வெற்றிக்குப் பின்னால் அவர்களது பல வருட உழைப்பு, கனவு, லட்சியம் எல்லாம் உரமாக இருக்கும்.
அப்படிப்பட்ட நிஜ நாயகர்களில் ஒருவர் தான் ஷாஸ் சாம்சன். கனடாவின் டொரோண்டாவில் வசித்து வருகிறார் இவர். தற்போது 50 வயதாகும் சாம்சன், அங்கு பிரபலமான சமையல் நிபுணர். கடந்தாண்டு புதிதாக ஹோட்டல் ஒன்றைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கனடாவில் குறிப்பிடத்தக்க கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வரும் சாம்சன், வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவரல்ல. அவரது குழந்தைப் பருவம் சினிமாவைக் காட்டிலும் திருப்பங்கள் நிறைந்தது.
தனது எட்டு வயதில் கோவையில் ரயில்வே டிராக்கை ஒட்டியிருந்த பகுதி ஒன்றில் தனது குடும்பத்துடன் குடிசைப் பகுதியில் வசித்து வந்தவர் தான் சாம்சன். இவரது தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. குடும்பம் வறுமையான சூழலில் தவித்த நிலையில், ஒரு நாள் கோவை பேருந்து நிலையத்தில் தனது பெற்றோரைப் பிரிந்தார் சாம்சன்.
குடும்பம் முழுவதும் வெளியூருக்கு குடிபெயர சாம்சன் மட்டும் கோவையில் மாட்டிக் கொண்டார். சாம்சனுக்கு எங்கே சென்று தனது குடும்பத்தினரைத் தேடுவது எனத் தெரியாத வயது. குடும்பத்தினரும் மீண்டும் அவரைத் தேடி வந்த மாதிரி தெரியவில்லை.
இதனால் எங்கே செல்வது என்ற குழப்பத்தில் தெருத்தெருவாகச் சுற்றித் திரிந்துள்ளார் சாம்சன். ஒரு கட்டத்தில் அப்பகுதியில் இருந்த ஹோட்டல் ஒன்றின் அருகே இருந்த குப்பைத் தொட்டியே அவரது இருப்பிடம் ஆனது. அங்கு கொட்டப்படும் ஹோட்டலின் மிச்சம் மீதி உணவுகளைச் சாப்பிட்டு பசியாறத் தொடங்கினார். இரவு நேரங்களில் அருகில் இருந்த சினிமா தியேட்டர் ஒன்றின் வாசலில் மற்றவர்களுடன் சேர்ந்து படுத்துத் தூங்கியுள்ளார்.
இப்படியாகச் சென்று கொண்டிருந்த சாம்சனின் வாழ்க்கையில் குழந்தை நல அதிகாரிகள் மூலம் விடிவு காலம் ஏற்பட்டது. எட்டு வயது சிறுவன் ஆதரவற்று தெருவில் சுற்றித் திரிகிறான் என்பதைக் கேள்விப்பட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், சாம்சனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் வளர்ந்து வந்த சாம்சனை 1979ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தம்பதியினர் தத்து எடுத்தனர்.
அன்றில் இருந்து சாம்சனின் வாழ்க்கை அடியோடு மாறியது. வளர்ப்பு பெற்றோரோடு கனடா சென்றார் சாம்சன். அங்கு அவர் விருப்பப்பட்டதை எல்லாம் செய்து கொடுத்து சந்தோசமாகப் பார்த்துக் கொண்டனர் அந்த வளர்ப்பு பெற்றோர்.
விவரம் தெரியாத வயதில் பசியோடு தெருத்தெருவாக அலைந்ததாலோ என்னவோ, விதவிதமாக சமைக்கும் சமையல் கலை மீது சாம்சனுக்கு ஈடுபாடு ஏற்பட்டது. எனவே சமையல் கலையையே தனது விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தார். பின்னாளில் அதையே தன் தொழிலாகவும் மாற்றிக் கொண்டார்.
விருப்பத்தோடு செய்யும் எந்த தொழிலும் நிச்சயம் வெற்றிக் கனியையே பரிசாகத் தரும். சாம்சன் வாழ்விலும் அதுவே நடந்தது. சாம்சன் தொடங்கிய ஹோட்டல் தொழில் நல்ல வருவானத்தை ஈட்டித் தர, தற்போது கனடாவில் கோடீஸ்வரராக வாழ்ந்து வருகிறார் அவர்.
கொரோனா தாக்கத்தால் மற்ற தொழில்களைப் போலவே சாம்சனின் ஹோட்டலும் கடுமையான நிதிப் பிரச்சினையில் சிக்கியது. ஆனால் அப்போது தான் சிறுவயதில் சந்தித்த பிரச்சினைகளில் இருந்து கற்ற பாடம், பாதிப்புகளை கடந்து செல்ல அனுபவமாக இருந்ததாக கனடா நாட்டு இணையதளம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் சாம்சன் கூறியுள்ளார்.
மேலும், ‘தனக்கு நேரத்தின் மீது அதீத நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ள சாம்சன், தான் ரோட்டில் சுற்றித் திரிந்த அந்த நேரத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் பார்க்காவிட்டால், தனது வாழ்க்கை இப்படி மாறியிருக்காது’ என முகம் தெரியாத அந்த அதிகாரிகளுக்கு தனது நன்றிகளைக் கூறியுள்ளார் சாம்சன்.
வாழ்க்கை எந்தவொரு நொடியிலும் மாறலாம் என வாழ்க்கை தனக்கு கற்றுக் கொடுத்தப் பாடத்தை மற்றவர்களுக்கும் தன் செயல்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் சாம்சன். ஆம், எப்படி கனடா பெற்றோரால் தன் வாழ்க்கை மாறியதோ, அதே மாதிரி தன்னைப் போல் சிறுவயதில் கஷ்டப்படும் குழந்தைகளின் வாழ்க்கையும் மாற வேண்டும் என தன்னால் இயன்ற செயல்களைச் செய்து வருகிறார்.
“தற்போது என்னைப்போல் உள்ள, 22 குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். இதேபோல் சாம்சன் தம்பதியினர் எனக்கு உதவியதால் தான் என்னால் இப்போது மற்றவர்களுக்கு உதவ முடிகிறது,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஷாஸ் சாம்சன்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: கனடா மிரர்