அமெரிக்கா தீர்மானத்தில் வலம்வர சிறிலங்கா சீனலங்கா ஆகிறது! பனங்காட்டான்
வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கை பொறுப்பேற்பதற்காக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்க வேண்டுமென, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா றோஸ் அம்மையார் விடுத்திருக்கும் வேண்டுகோள், வலி சுமக்கும் தமிழர் ஒவ்வொருவரதும் கவனத்துக்கானது.கொரோனா தடுப்பிலும் கட்டுப்பாட்டிலும் கடந்த வருடம் முன்னணி வகித்த இலங்கை, நோய்த் தொற்றில் முதல் இடத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் நாடு முழுமையான முடக்கத்துக்குள் சென்றுவிட்டது.
கொரோனா செயலணியின் தலைவராகவுள்ள ராணுவத் தளபதியும் போர்க்குற்றவாளியுமான சவேந்திர சில்வாவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மருத்துவ நிபுணர்களிடம் கையளிக்குமாறு ஆளும் தரப்புக்குள்ளிருந்து குரல்கள் கிளம்பியுள்ளன.
ஆட்சி நடத்தும் பொதுபலசேனவின் சர்வ வல்லமை கொண்டவரான கோதபாயவின் சகோதரர் பசில் ராஜபக்ச, நாடு நெருக்கடிக்குள்ளிருக்கும் வேளையில் எதற்காக அமெரிக்காவுக்குச் சென்று அங்கு தங்கியிருக்கிறார் என்ற கேள்வியும் உள்வட்டாரங்களில் எழுந்துள்ளது.
கொரோனா பரம்பலையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி நிறுத்தலாமென்ற போக்கில் ராணுவமும் காவற்துறையும் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளன. நோயுறும் அப்பாவி மக்கள் மருத்துவ வசதியோ, மருத்துவமனைகளில் படுக்கை வசதியோ இன்றி வீடுகளில் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் கட்டுப்பாடாக வாழத் தவறுவதே நோய்ப்பரவலுக்கு முக்கிய காரணமென கோதபாய வெளியிடும் கருத்து அவரது அறியாமையையும் இயலாமையையும் வெளிப்படுத்துகிறது.
போகிறபோக்கைப் பார்த்தால், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களை படுகொலை செய்துவிட்டு, கொரோனாவை அழித்துவிட்டதாக முள்ளிவாய்க்கால் போர்வெற்றிப் பிரகடனம் போன்று சவேந்திர சில்வாவும் கோதபாய ராஜபக்சவும் கூட்டாகப் பிரகடனம் செய்தாலும் ஆச்சரியப்பட நேராது.
இதற்கிடையில், ஃபோர்ட் சிற்றி எனப்படும் புதிய துறைமுக நகரத்தை சீனாவுக்குத் தாரை வார்க்கும் சட்டம் இரண்டு நாள் ஜெற் வேக விவாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்தின் சில பகுதிகள் அரசியல் அமைப்புக்கு முரணானது என்றும், இதனை நிறைவேற்றுவதனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு தேவையெனவும் ஐந்து நீதியரசர்கள் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது.
திருத்தம் செய்தார்களோ – என்னவோ, ஏதோ திருகுதாளம் பண்ணி நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள வாக்குப் பலத்தால் அதனை நிறைவேற்றி விட்டனர். வாக்களிப்பு எண்ணிக்கைகூட குளறுபடியாகவே உள்ளது.
கொழும்புக்கு வெளியே கடலை நிரவி, சுமார் 670 ஏக்கர் கடற்பரப்பை புதிய துறைமுக நகரமாக்கி சீனாவிடம் இதனை கையளிக்க புதிய சட்டம் கோதபாயவுக்கு அதிகாரம் அளிக்கிறது. இத்துறைமுக நகரம் இலங்கை வரைபடத்துக்கு வெளியே அதனுடன் இணைந்ததாக உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு குட்டித்தீவு.
இலங்கையின் எந்தவொரு அமைச்சின் கீழும், மாகாண – மாவட்ட நிர்வாகத்தின் கீழும் இது இருக்காது. இதனை நிர்மாணிக்கும் முழுச்செலவையும் கடந்த பத்தாண்டுகளாக சீனாவே வழங்கியது. சீன துறைமுக என்ஜினியரிங் கார்ப்பரேசனிடம் இது கையளிக்கப்படும்.
இலங்கையின் நிதி மற்றும் முதலீட்டுச் சந்தை ராஜாங்க அமைச்சராகவிருக்கும் அஜித் நிவால் கப்ரால், புதிதாக உருவாக்கப்படும் துறைமுக நிர்வாக ஆணைக்குழுவின் தலைவராக நியமனமாவாரென கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக இருந்தவர் இவர். அப்போது பல கோடி ரூபா மோசடிகளில் ஈடுபட்டதாக மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோதபாய ஆட்சிக்கு வந்ததும் அவர் மீதான வழக்குகள் ரத்துச் செய்யப்பட்டதோடு அவர் எம்.பி.யாகி அமைச்சராகியுள்ளார். அவரின் மகன் சத்துர விஸ்வஜித் கப்ரால் ஏற்கனவே இந்தத் துறைமுக நிர்வாக அதிகாரத்தில் எஸ்டேற் முகாமையாளர் பதவி வகித்து வருகிறார்.
சீன அரசு சர்வதேச ரீதியாக செயற்படுத்தி வரும் கடன் – வலை ராஜதந்திரத்தில் (னுநடிவ – வுசயி னுipடழஅயஉல) இலங்கை வீழ்த்தப்பட்டுவிட்டது. இலங்கை இன்னொரு ஹொங்கொங்காக சீனாவால் மாற்றப்படுகிறது. இந்துசமுத்திர உபகண்டத்தில் இந்தியாவின் அயலுறவும் பாதுகாப்பும் வெளிநாட்டுக் கொள்கையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தமிழரின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படுமென்ற வாய்ப்பந்தலும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே தங்கள் இலக்கு என்ற கனவும் இந்தியாவிடமிருந்து மெதுமெதுவாக விலக ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைக் கண்காணிக்க இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையைத் தவிர வேறெந்த நாடும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. இதனை அறிந்து கொண்ட சீனா காய் நகர்த்தலில் பூரண வெற்றி கொண்டுள்ளது.
பட்டுப்பாதை நிர்மாணத்துடன் குத்தகை அடிப்படையில் இலங்கைக்குள் கால்வைத்த சீனா, படிப்படியாக அம்பாந்தோட்டைத் துறைமுகம், அம்பாந்தோட்டை விமானத்தளம், ஆங்காங்கு மருத்துவமனைகள், உல்லாச விடுதிகள், வீதிப் பராமரிப்புகள், கட்டிட உபயங்கள், அனல் மின்நிலையங்கள் என்று தனது கால்களை அகலமாகவும் ஆழமாகவும் பதித்து இலங்கையை ஆக்கிரமித்துள்ளது.
ஃபோர்ட் சிற்றி துறைமுக நகரத்தை அமைப்பதற்கான முழு நிதியையும் வழங்கியதால் இப்போது நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் வழியாக அந்தப் பிரதேசத்துக்கான தனக்குரிய உறுதியை சீனா பெற்றுக்கொண்டுவிட்டது. இங்கு பிரதான, முக்கிய பதவிகளில் பணியாற்றவிருப்பவர்கள் சீனர்கள். இவர்கள் அந்நாட்டின் புலனாய்வுத்துறையினர் (ஒற்றர்கள்) என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. சீன விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள் என்பவற்றுடன் போர்த்தளபாடங்கள், நவீன ஆயுதங்கள், இரசாயனங்கள் தாராளமாக இங்கு வருவதற்கு வாய்ப்புண்டு.
இவைகளைத் தடுக்கும் அல்லது கண்காணிக்கும் – ஆகக்குறைந்தது பார்வையிடும் அதிகாரங்கூட இலங்கை அரசில் எவருக்கும் கிடையாது. மொத்தமாகச் சொல்வதானால் ஃபோர்ட் சிற்றிக்குள் யார் செல்வதானாலும் அதற்கு சீன பாஸ்போர்ட் பெறவேண்டுமெனத் தெரிய வந்துள்ளது.
இந்தப் புதிய தீவை சீனப் படையினரே காவல் புரிவர். தொழிலாளர்களாகவும் கூலித்தொழிலாளிகளாகவும் நாளாந்த அடிப்படையில் சிங்களவர் சிலருக்கு வேலை வழங்கப்படக்கூடும். காலக்கிரமத்தில் சீனர்களே அதற்கும் இறக்குமதி செய்யப்படுவர்.
இந்த நிலைமை எவ்வகையிலும் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இலங்கையை எப்போதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அக்கறை காட்டி வந்த அமெரிக்கா இப்போது கையறு நிலையில் உள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மருமகனான ரணில் விக்கிரமசிங்க, போர்க்குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேக ஆகிய இருவரையும் வெவ்வேறு காலத்தில் ஜனாதிபதியாக்க முயன்ற அமெரிக்க வல்லாதிக்கம் அதில் வெற்றி பெறவில்லை.
பின்னர், சந்திரிகா, ரணில் ஆகியோரின் உதவியுடன் மைத்திரிபால சிறிசேனவை மகிந்த அணியிலிருந்து ஓரிரவு பிரித்தெடுத்து பொதுவேட்பாளராக்கி தனது இலக்கை எட்டியது. ஆனால், மைத்திரி – ரணில் உள்வீட்டு மோதல் அமெரிக்க திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டது. இக்காலத்தில் சீனா தனது பயணத்தை ஆமை வேகத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஏதுவாக கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியானார். இது அமெரிக்காவால் ஜீரணிக்க முடியாதது.
இதன் பிரதிபலிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் இலங்கை மீதான இறுக்கமான தீர்மானத்தை பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் ஊடாக முன்னெடுப்பதில் அமெரிக்காவே பிரதான வகிபாகம் எடுத்தது. இனிவரும் ஜெனிவா கூட்டத்தொடர்கள் இந்தத் தீர்மானத்தின் செயல்வடிவத்துக்கு மேலும் பலம் கொடுப்பதற்கு அமெரிக்கா முன்னிற்கும் என்பதற்கு, அமெரிக்க காங்கிரஸ் எனப்படும் சனப்பிரதிநிதிகள் சபையில் சில நாட்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட தீர்மானம் தெரியத்தருகிறது.
ஜோ பைடன் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்க காங்கிரஸ் பேரவையில் இந்தத் தீர்மானத்தை அதன் உறுப்பினரான டெபோரா றோஸ் அம்மையார் முன்வைத்துள்ளார். இலங்கையில் நிகழ்ந்த குற்றங்களுக்கான சர்வதேசப் பொறிமுறையை கோரும் தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸ் இதனூடாக வலுப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் கடந்துள்ள நிலையிலும் அக்குற்றங்களை புரிந்துள்ளவர்களை பொறுப்புக்கூற செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளது எனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டு;ள்ளது.
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் போரில் மரணமடைந்துள்ளனர். காணாமல் போயுள்ளனர். துஸ்பிரயோகம் மற்றும் இடப்பெயர்வுகளை அனுபவித்துள்ளனர் என்பதை அமெரிக்க காங்கிரஸின் தீர்மானம் சுட்டியுள்ளதோடு, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயக பாரம்பரிய பிரதேசங்களில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு சிப்பாய் என்ற அடிப்படையில் ராணுவ மயமாக்கல் காணப்படுகின்றது என்றும் இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இ;த்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பின்வரும் வாசகம் முக்கியமானது: வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கை பொறுப்பேற்பதற்காக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்க வேண்டுமென, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா றோஸ் அம்மையார் விடுத்திருக்கும் வேண்டுகோள், வலி சுமக்கும் தமிழர் ஒவ்வொருவரதும் கவனத்துக்கானது.
ஒன்ராறியோ மாநில அரசு இனப்படுகொலையை அங்கீகரிக்கும் சட்டத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸ் முன்மொழிந்துள்ள தீர்மானம் இன்றைய ஈழவர் அரசியல் போக்கில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் எனக்கொள்ளலாம்.
சிறிலங்கா என்பது சீனலங்காவாக மாறிவருகிறது. இலங்கை – சீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்க தலைவராக மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவாகியுள்ளார். இது தற்செயலானதல்ல. மறுபுறத்தில் இலங்கையை சுற்றிவளைக்கும் திட்டத்தில் அமெரிக்கா வெளியுலகில் தனது தீர்மானங்களை முடுக்கி வருகிறது. இதில் வெல்லப்போவது யார்?