துறைமுகங்களில் தடையில்லை:மீன்கள் இறக்க தொடங்கியது!
கொழும்பு துறைமுகத்துக்கு வடமேற்கு திசையாக தீப்பற்றி எரிந்த எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பலால் மீன்கள் உயிரிழந்து மிதக்க தொடங்கியுள்ளது.இதனிடையே கப்பலுக்கு கட்டார் மற்றும் இந்திய துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை குறித்த கப்பலின் சிங்கப்பூரில் உள்ள தாய் நிறுவனம் நிராகரித்துள்ளது.
எக்ஸ்ப்ரெஸ் கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், எம்.வீ. எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பல் இந்தியாவில் ஹசீரா மற்றும் கட்டாரின் ஹமான் ஆகிய துறைமுகங்களில் சரக்குகளை இறக்கி, ஏற்றியிருந்ததாக தெரிவித்தார்.
இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த 1486 கொள்கலன்களில், 25 டொன் நைட்ரிக் அமிலம் அடங்கிய பல கொள்கலன்களும் இருந்தன. இதில் நைட்ரிக் அமிலம் அடங்கிய ஒரு கொள்கலனில் கசிவு ஏற்படுவது கண்டறிப்பட்டதையடுத்து, குறித்த கொள்கலனை இந்த துறைமுகங்களில் பாதுகாப்பாக இறக்கி வைக்க அனுமதி கோரப்பட்டது.
எனினும், இந்த இரசாயன திரவிய கொள்கலனை களஞ்சியப்படுத்த அது தொடர்பான நிபுணத்துவம் பெற்றவர்கள் எவரும் அத்துறைமுகங்களில் இல்லை எனத் தெரிவித்தே அனுமதி மறுக்கப்பட்டது.
அதன்பிறகே அடுத்த தரிப்பிடமான கொழும்பு துறைமுகத்தை நோக்கி எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பல் தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.
அதற்கு கொழும்பு துறைமுகத்துக்கு உரித்தான கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த வேளையில் நைட்ரிக் அமிலம் அடங்கிய கொள்கலன் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.
எனினும், இந்த நைட்ரிக் அமிலம் எந்த நாட்டுக்கு கொண்டு செல்ல தயாராக வைக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவரவில்லை.
எனினும், இக்கப்பலின் அடுத்த தரிப்பிடம் இந்தியா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, கப்பல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த துறைமுக அதிகாரசபை இன்று மாலை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டது.
அதில், இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு உரித்தான சிஐசிடி கொள்கலன் முனையத்தில் சேவை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி துறைமுகத்துக்கு வெளிப்பகுதியில் இந்த கப்பல், இலங்கை துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு, அன்று நள்ளிரவு துறைமுகத்துக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அச்சந்தர்ப்பத்தில் துறைமுகத்தில் கப்பல் தரிப்பிடம் தயார்நிலையில் இல்லாதிருந்தமையினால் துறைமுகத்துக்கு அப்பால் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டது.
அச்சந்தர்ப்பத்திலாவது கப்பலினுள் ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் எவ்வித தகவலும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என துறைமுக அதிகாரசபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வர்த்தக கப்பல்களை காப்புறுதி செய்யும், லண்டனிலுள்ள பீ என்ட் ஐ கிளப் (P&I Club) காப்புறுதி நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையொன்றுக்கமைய, ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும், உலகின் ஏதாவதொரு இடத்தில் வர்த்தக கப்பல் ஒன்று தீப்பற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தீ ஏற்படுதற்கான மூன்று பிரதான காரணங்களை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
நிலக்கரியை ஏற்றிச் செல்லும்போது ஏற்படக்கூடிய அதிக வெப்பத்தினால் ஏற்படும் தீ, இரசாயன பொருட்களை முறையாக களஞ்சியப்படுத்தமையினால் ஏற்படும் தீ மற்றும் பற்றரிகளை கொண்டு செல்லும்போது ஏற்படக்கூடிய வெப்பத்தினால் ஏற்படும் தீ என வகைப்படுத்தியுள்ளது.
கப்பல் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி தனது முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.
சிங்கப்பூரின் எக்ஸ்ப்ரஸ் கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் தனது மூன்றாவது வர்த்தக பயணித்தின் போது இவ்வாறு தீப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.