November 22, 2024

மோதல் போக்கிற்கு இடையில் நேருக்கு நேர் சந்திக்கப்போகும் அமெரிக்கா – ரஷ்யா அதிபர்கள்

அமெரிக்கா – ரஷ்யா இரு நாட்டு அதிபர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபரின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக, ஜோ பைடன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற உடன், ரஷ்யாவில் எதிர்க் கட்சி தலைவர் நவல்னியை விஷம் வைத்து கொல்ல முயன்ற விவகாரத்தில், அந்நாட்டு அதிகாரிகள் மீது தடை உத்தரவு பிறப்பித்தார்.
ஆப்கானில், அமெரிக்க படைகளை தாக்கும் தலிபான்களுக்கு, ரஷ்ய அரசு பரிசு தருவதாக பைடன் குற்றஞ்சாட்டியதுடன், ரஷ்ய அதிபர் புடின் ஒரு கொலையாளி எனக் கருதுவதாகவும் தொலைகாட்சிக்கு அளித்த செவ்வியொன்றில் கூறியிருந்தார்.மேலும் உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எண்ணெய் குழாய்கள் அமைப்பதை கண்டித்து ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு ஜோ பைடன் கடந்த வாரம் கூடுதல் தடைகளை விதித்தார்.
இத்தகைய மோதல் போக்கிற்கு இடையில் ஜெனீவா நகரில் ஜூன் 16ஆம் திகதி நடைபெறும் உச்சி மாநாட்டில், ஜோ பைடனும், விளாடிமிர் புடினும் நேருக்கு நேர் சந்தித்து பேச உள்ளனர். இருவரும், சர்வதேச பிரச்னைகள் குறித்து பேசுவார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.