November 22, 2024

மாடு கடத்தல்! மூவருக்கு அபராதம்!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக ஜீப் வண்டியில் மாடுகளை கடத்தி கொண்டு சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 17 ஆயித்து 100 ரூபா அபதாரம் விதித்து மீட்கப்பட்ட 6 மாடுகளையும் அரசு உடமையாக்கி நேற்று வெள்ளிக்கிழமை (21) நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை (06) அதிகாலை வவுணதீவு பிரசேத்தில் இருந்து ஜீப் ரக வாகனத்தில்  காத்தான்குடி பிரதேசத்திற்கு 6 மாடுகளை கடத்திச் சென்ற ஜீப் ரக வாகனத்தை வலையிறவு பாலத்துக்கு அருகில் பொலிசார் மடக்கி பிடித்து 3 பேரை கைது செய்ததுடன் கடத்திச் செல்லப்பட்ட 6 மாடுகளையும் ஜீப் ரக வாகனம் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  அவர்களை நேற்று வெள்ளிக்கிழமை (21) நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான்  உத்தரவிட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நீதிமன்றில் குறித்தவழக்கு எடுக்கப்பட்டபோது கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் தலா 5 ஆயிரத்து 700 வீதம் 17 ஆயிரத்து 100 ரூபா அபதாரமாக செலுத்துமாறும் மீட்கப்பட்ட 6 மாடுகளையும் அரசுடமையாக்கியதுடன் கடத்தலுக்கு பாவிக்கப்பட்ட ஜீப் ரக வாகனம் தொடர்பாக பூரண விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அரசுடமையாக்கிய மாடுகளை அனுராதபுரத்திலுள்ள அரச மாட்டுப்பண்ணைக்கு இன்று சனிக்கிழமை (21) வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து வாகனத்தில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.