November 22, 2024

பேரறிவாளனுக்கு 30 நாள் சிறை விடுப்பு !

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஒரு மாத சிறை விடுப்பு வழங்கியுள்ளது தமிழக அரசு.முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலுவையில் இருப்பதை அதற்கான காரணமாகக் கூறப்பட்டது.

தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், “பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளதால், அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும்“ என அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று (மே 18) முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்தார்.

பேரறிவாளன் தாயாரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 30 நாள் சிறை விடுப்பு வழங்கியிருக்கிறது. அந்த அறிவிப்பில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையிலிருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை அளித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.