November 22, 2024

காசா மீது இன்றும் தாக்குதல்! 42 பேர் பலி! டசின் கணக்கானோர் படுகாயம்!

பாலத்தீனத்தின் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பிரசேதமாக காசா மீது இன்று ஞாயிற்றுக்கிழமையும் 7வது நாளாகவும் இஸ்ரேல்வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை  நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் டசின் கணக்காணோர்  காயமடைந்துள்ளனர். வான்வழித் தாக்குதலில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் தரைமட்டமாகின. இறந்தவர்களில் 10 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உள்ளடங்குகின்றனர். இடிபாடுகளுக்கு அடியில் தேடல்கள் தொடர்கின்றன.

காசாவின் ஹமாஸ் தலைவரான யேஹியா அல்-சின்வாரின் வீடும், அவரது சகோதரர் வீடும் ஏவுகணை வீசி தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் காசா பகுதியில் குறைந்தது 41 குழந்தைகள் உட்பட 188 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேலிய படைகள் குறைந்தது 13 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன. இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் இறந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேலுக்கு எதிராக காசாவில் சுமார் 120 உந்துகணைகளை ஒரே இரவில் ஹமஸ் போராளிகளால் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வரும் மோதல்களில் கமாஸ் போராளிகளின் உந்துகணைத் தாக்குதல்களில் 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மீதான தங்கள் தாக்குதல் இன்னும் முடியவில்லை. தேவை எவ்வளவு உள்ளதோ அதுவரை இந்த தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் பல ஆண்டுகளாக மிக மோசமான வன்முறை நடந்து வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இன்று ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.

மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா. ஐ.நா மற்றும் எகிப்து தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த பலனும் தராத நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவரசமாக கூடி நிலைமையை பற்றி இன்று விவாதிக்க உள்ளது.
இந்த மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, பாலஸ்தீன் அதிபர் மகமூது அப்பாஸ் ஆகியோருடன் அவர் தொலை பேசியில் பேசினார். அப்போது ஹமாஸ் தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மகமூது அப்பாசிடம் கேட்டுக் கொண்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.