இலங்கையில் இரவு நடமாட தடை!
இலங்கையில் இன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31ம் திகதி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதனிடையே இலங்கையில் இருந்து 05 நாடுகளுக்கு பயணிகளை அழைத்து செல்வது இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து வரும் விமானங்களுக்கு அந்த நாடுகள் தடை விதித்துள்ளதே இதற்குக் காரணம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் , இத்தாலி , பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தொடர்ந்தும் இலங்கைக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பயணிகள் விமான சேவை கைவிடப்பட்டாலும் இலங்கையிலிருந்து செல்லும் சரக்கு விமானங்கள் அங்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.