November 22, 2024

கனடா தூதுவரிடம் கவலையை வெளிப்படுத்திய சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர்

கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையினால் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் என பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை நேற்று சந்தித்து இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் எந்தவொரு இனப்படுகொலையும் கண்டறியப்படவில்லை என்ற கனடா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக அவர்கள் செயல்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டமூலத்திற்காக ஒன்டாறியோ சட்டசபையின் உப ஆளுநர் வழங்கிய அனுமதியை இடைநிறுத்த கனடா அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சட்டமூலம் காரணமாக நல்லிணக்க செயற்பாடுகளால் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இரு தரப்பு உறவுகள் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பிலும் இதன்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர், கனடா உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் 104ஆம் இலக்க தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் குறித்த சட்டமூலம் கடந்த 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.