றிசாத் விடுதலை:வலுக்கிறது எதிர்ப்பு!
ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில் மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்க ஆயத்தமான நிலையில் சிலருக்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தடை உத்தரவை கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.எச். சுஜித் பிரியந்த பெயர் குறித்தவர்களிடம் கையளித்தார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி கல்முனை நகர் மத்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அம்பாறையின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
தலைவர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய், ரிஷாத்தை அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே!, ரிஷாத்தை நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன?, யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கைது? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி கோஷமெழுப்பிய போது கல்முனை பொலிஸார் புகுந்து இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததுடன் சுலோகங்களை பறித்து போராட்டக்காரர்களுக்கு கட்டாய பி..சி.ஆர் பரிசோதனை செய்தனர்.
கல்முனை பொலிஸாரின் கெடுபிடியால் அங்கிருந்து வெளியேறி சென்ற போராட்டக்காரர்கள் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் சமூக இடைவெளிகளைப் பேணிப் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்து மேற்கொண்டனர்.
இதன் போது ரிஷாத்தின் கைதுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.