பாரதி கேட்ட சிங்களதீவுப் பாலத்தை பாரதம் பார்த்திருக்க சீனா போடுகிறது! பனங்காட்டான்
கடன் – வலை ராஜதந்திரத்தைப் (DEBT – TRAP DEMOCRACY) பயன்படுத்திஇ கேட்கும் கடனைவிட கூடுதலாக வழங்கி உலக நாடுகளை மடக்கி பிடித்துவரும் சீனாவிடம் இலங்கை வசமாக சிக்குண்டு விட்டது. இதிலிருந்து மீள்வது இயலாதது. இலங்கைத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்ற மகாகவியின் கனவை, பாரதம் பார்த்திருக்க சீனா நனவாக்குகிறது!
இலங்கையின் சமகால அரசியலில் அதிகம் பேசப்படும் நாடாக சீனா இருக்கிறது. அயல்வீட்டு நண்பனான இந்தியாவை ஒரு கரையில் தூக்கிப் போட்டுவிட்டது சீனா என்று கூறலாம்.
சீனா எவ்வாறு இலங்கையில் முக்கியத்துவம் பெற்றது என்பது பலருக்கும் ஆச்சரியம். முக்கியமாக, கொரோனாவை ஓரந்தள்ளிவிட்டு சீனா தன்னை மையப்புள்ளியில் நிறுத்தி வைத்துள்ளது.
இலங்கைக்குள் சீனா எவ்வாறு புகுந்தது, தனது கால்களை எவ்வாறு அகல விரித்தது என்று ஆராய்வதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு.
நான் சிறுவனாக இருந்தபோது யாழ்ப்பாணத்து வீதிகளில் அவ்வப்போது துணிகளை பொட்டலமாகக் கட்டி தலையில் சுமந்தவாறு விற்பனை செய்ய சீனர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். குறிப்பிட்ட சில வீடுகளுக்கு இவர்கள் வாடிக்கையாளர்களாகச் செல்லும்போது அக்கம்பக்கத்து பெண்களும் அவ்வீட்டில் கூடி அவர்களிடம் துணிகளை கொள்வனவு செய்வர்.
படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வெள்ளைப் பப்ளின் துணிகள், றேந்தை பின்னப்பட்ட பூக்கள் போட்ட துணிகள் என்பவை சீனர்களின் விசேட தயாரிப்புகள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது. எங்கள் அம்மாமாருக்கு சீன மொழிகள் தெரியாது. கைமொழி, கண்மொழி, பரிமொழிகளால் வியாபாரம் கச்சிதமாக நிறைவேறும்.
நான் மாணவனாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருந்த டயராம்ஸ், ரொலராம்ஸ் என்ற குஜராத்தியர்களின் ஜவுளிக் கடைகளுக்கு அருகே பிரபல்யமான சீன உணவகம் ஒன்று இருந்தது.
தினமும் காலையில் உணவகத்தின் கூரை ஓடுகளுக்கு மேலே ஒரு படங்கு விரித்து அதன்மேல் இடியப்பம் தனித்தனியாக அடுக்கப்பட்டு சூரிய வெப்பத்தில் காயப்போடப்பட்டிருக்கும். இரவு உணவில் அதுதான் சுவையான நூடில்ஸ் என்ற பெயரில் பரிமாறப்படும் என்பதைக் கண்டறிய பல காலம் எடுத்தது. இது அறுபதுகளில் நான் கண்ட சீனர்களும் அவர்களின் யாழ்ப்பாண வணிக ஈடுபாடும். மஞ்சள் தோல் நிறமுடைய சீனர்கள் சிரிக்கும்போது அவர்களின் கண்கள் மூடப்படுவதை நாம் மாணவர்கள் பகிடியாக பரிமாறிக் கொள்வோம்.
உயர் வகுப்புப் படிக்கும்போது இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான வணிக பண்டமாற்றுப் பற்றி அறிய முடிந்தது. இலங்கையின் பிரதான ஏற்றுமதிகளில் ஒன்றான றப்பரை கொள்முதல் செய்த சீனா, அதற்குப் பதிலாக தனது நாட்டின் வெள்ளைப் பச்சை அரிசியை இலங்கைக்கு வழங்கியது. இதனை அப்போது கூப்பன் அரிசி என அழைப்பர்.
இரு தரப்பும் பணம் கொடுத்து வாங்காது பொருட்களை கொடுத்து வாங்கியதால் பண்டமாற்று என்ற பெயர் வழங்கலாயிற்று. இவ்விடயத்தில் இலங்கை ஏமாற்றப்பட்டதாக எங்கள் ஆசிரியர் அடிக்கடி கூறுவார்.
அதாவது, அரிசிக்குப் பதிலாக றப்பரை இலங்கையிடமிருந்து பெற்ற சீனா, அந்த றப்பரில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் டயர், டியுப்இ றப்பர் பந்துகள், பலூன்கள் போன்றவற்றை இலங்கைக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியது. வணிக விடயத்தில் சீனா எவ்வாறு தலையைச்சுற்றும் குள்ளநரி திருகுதாளங்களை மேற்கொண்டது என்பதற்கு இது போதும்.
உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடு. தொழில்நுட்பத்திலும் சர்வதேச ஏற்றுமதியிலும் முதலிடம் வகிக்கும் நாடு. கம்யூனிச சித்தாந்தத்தை சர்வாதிகாரமாகக் கொண்ட நாடு. உலக வல்லரசான அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் நாடு. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவுக்கு சவாலாக விளங்கும் நாடு. இத்துணை அடைமொழிகளுக்கு அப்பால், இலங்கையை ஆரம்பத்தில் குத்தகைக்கு எடுத்துஇ இன்று முழுமையாக கொள்முதல் செய்யும் நாடு சீனா என்பதால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் புருவங்களை உயர்த்தி விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சர்வதேச ரீதியாக எதற்காக துறைமுகங்களை சீனா நிர்மாணித்து வருகிறது. கேட்கப்படும் கடன்தொகையைவிட பல மடங்கான தொகையை எதற்காக சீனா அள்ளிக் கொடுக்கிறது.
இந்தக் கேள்விகளுக்கான பதில் தேடும் பாதையில் கொழும்புத் துறைமுகத்திற்கருகே உருவாக்கப்பட்ட கிழக்கு முனையம் முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கு முனையம் என்று அழைக்கப்படும் போர்ட் சிற்றி என்னும் துறைமுக நகரம், இலங்கையின் வரைபடத்துக்கு வெளியே கடலுக்குள் உருவாக்கப்பட்ட – இலங்கையுடன் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பிரதேசம்.
இது இலங்கையின் எந்தவொரு மாகாணத்துக்கும் உட்படாதது. எந்த அரசாங்க அதிபர் நிர்வாகத்துக்குள்ளும் சேராதது. எந்த அமைச்சினதும் கட்டுப்பாட்டுக்குள் இடம்பெறாதது. ஜனாதிபதியின் (கோதபாயவின்) நேரடிப் பார்வையில் சீனாவின் முழுமையான நிர்வாகத்தில் இயங்கும். அதற்கேற்றாற்போன்று இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. (இதனை ஆட்சேபித்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது.)
மகிந்த ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் மத்தள துறைமுகமும், விமான நிலையமும் சீனாவினால் கடன் அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்பட்டது. அத்துடன் 99 ஆண்டுகளுக்கான குத்தகையும் சீனாவுக்கானது. இலங்கையின் பிரதான நகரங்கள் ஊடாகச் செல்லும் பட்டுப்பாதைகள் அனைத்தும் கடன் அடிப்படையில் சீனாவால் நிர்மாணிக்கப்பட்டவை.
இலங்கைக்குள் இப்போது பல கட்டிடங்களை சீனாவே நிர்மாணித்து வருகிறது. இதில் பணிபுரிபவர்கள் சீனப் பிரஜைகள். இவர்கள் வசதிக்காக எனக்கூறி புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்களில் சீன மொழிகளில் பெயர்ப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் – 1973ல் அவரது காலஞ்சென்ற கணவர் எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்தமாக பாரிய மாநாட்டு மண்டபம் ஒன்றை சீனா கொழும்பு நகரில் அன்பளிப்பாக நிர்மாணித்து வழங்கியது. இதுவே கட்டிட நிர்மாணத்துறையில் சீனாவின் முதற் பாதப்பதிப்பு.
தமிழரின் தாயகமான யாழ்ப்பாணக் குடாவில் மூன்று பிரதான தீவுகளுக்கு காற்றாலை மின்சாரம் வழங்கும் ஒப்பந்தம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய கச்சதீவை சிலவேளை இலங்கை சீனாவுக்கு தனது அன்பளிப்பாக வழங்கக்கூடும்.
சீனா தனது நாட்டில் 34 பிரதான துறைமுகங்களைக் கொண்டுள்ளது. இது போதாதென்று இருபதுக்கும் அதிகமான துறைமுகங்களை உலகம் முழுவதும் நிர்மாணித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து ஜிபுற்றி வரை, மாலைதீவிலிருந்து பிஜி தீவுகள் வரை, லத்தீன் அமெரிக்க நாடுகள், பிரேசில், சாம்பியா, கென்யா, யுகடோர், மியன்மார் நாடுகளில் சீனத்துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலப்பெருக்கம் போதாதென்று கடல் பெருக்கத்திலும் சீனா ஈடுபடுவது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெரும் தலையிடி.
இந்திய எல்லைப்புறங்கள் ஏற்கனவே சீனாவால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தை தனது மாநிலமென சீனா தொடர்ந்து உரிமைகோரி வருகிறது. இங்கு வாழும் இந்தியர்களை தனது நாட்டு மக்களெனக் கூறி, இவர்கள் சீனாவுக்கு விஜயம் செய்ய கடவுச்சீட்டு தேவையில்லையென சீனா அறிவித்து பல வருடங்களாகிவிட்டது.
அடிக்கடி இங்கு அத்துமீறிப் பிரவேசிக்கும் சீன ராணுவம், மலை மடிப்புகளில் சீனமொழியை செதுக்கி வைத்துள்ளது. இங்கு சுமார் மூன்று மைல் சுற்றளவில் 100 வீடுகளை சீனா நிர்மாணித்திருப்பதை சற்றலைற் மூலமே இந்தியா காண முடிந்தது.
அசாம், லடாக் பிரதேசங்களிலும் சீனப்படைகளின் ஊடுருவல் தொடர்கிறது. எல்லைப்புறங்களில் தனது ராணுவத்தால் சீன முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது இந்தியா திண்டாடுகிறது.
பாகிஸ்தான்இ பங்களதேஸ், சீனா என்று மூன்று எல்லைப் பகுதிகளையும் பறிகொடுக்கும் நிலையிலுள்ள இந்தியாவுக்கு இதுவரை திறக்கப்பட்டிருக்கும் ஒரே வழி இலங்கைப் பக்கம்தான். கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் சீனா வசமாகுமானால் இந்தியாவின் எதிர்காலப் பாதுகாப்பு கேள்விக்குறி.
தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை இந்தியா நேர்த்தியாகப் பெற்றுத் தருமானால், அது இந்திய உபகண்டத்துக்கு பாதுகாப்பாக அமையுமென நவம்பர் 27ம் திகதிய உரைகளில் பல தடவை கூறப்பட்டபோதும், அதனை அலட்சியம் செய்ததன் பலாபலனை இந்தியா இன்று எதிர்கொள்கிறது.
கடன் – வலை ராஜதந்திரத்தை (Debt – Trap Democracy) பயன்படுத்திவரும் சீனா, இலங்கையையும் அதே வலைக்குள் வசமாக சிக்க வைத்து இலங்கைக்குள் ஒரு குட்டித்தீவை உருவாக்கி, அதனூடாக ஒட்டகம் கூடாரத்துள் புகுவதுபோல நுழைகிறது.
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று மகாகவி பாரதி பாடியது பாரதத்துக்காக. அந்தப் பாலத்தை இப்போது அமைக்கிறது சீனா! இலவு காத்த கிளியாகிறது இந்தியா!!