November 22, 2024

பிற்போக்குவாதத்துடன் பின்னோக்கி நகரும் இலங்கை அரசு. ஜி.ஶ்ரீநேசன்,மட்டக்களப்பு.


தற்போதைய இலங்கை அரசாங்கம் 21 ஆம் நூற்றாண்டில் இருந்து,முற்போக்கான சிந்தனையுடன் முன்னோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அதனை விடுத்து 20ஆம், 19 ஆம் நூற்றாண்டை நோக்கிப் பிற்போக்குவாதத்துடன், பின்னோக்கி வேகமாக நகரத்துடிக்கிறது. இதற்காக இன, மத, மொழி என்கின்ற அடிப்படை வாதங்களைகளை உச்சாடனங்களாக உச்சரித்துச் செயற்படுகின்றது. பெரும்பான்மை சமூகமான சிங்கள பௌத்த மக்களை மாத்திரம் கவர்ந்து கொண்டால் போதும் என்ற இறுமாப்புடன் இந்தப் பொது சனப்பெரமுன அரசாங்கம் செயற்படுகிறது. அதாவது 1970, 1956 களில் ஆட்சியமைத்த ஸ்ரீமாவோ, பண்டாரநாயக்க யுகத்தை நோக்கிப் பயணிப்பதே இப்போதைய அரசாங்கத்தின் இலக்காக இருக்கின்றது. ஆனால் பண்டாரநாயக்க என்ன ஆனார். ஸ்ரீமாவோ 1977 பொதுத் தேர்தலில் என்ன ஆனார் என்பதை இந்த அரசாங்கம் ஆராய விரும்பவில்லை. சிங்கள வாக்குகளைத் தக்க வைப்பதற்காக சிங்கள மகளை எப்படித்திருப் திப்படுத்தலாம் என்பதையே இந்த அரசாங்கம் சிந்திக்கிறது, செயற்படுகின்றது. அதேவேளை தமிழ்பேசும் மக்களை எப்படியெல்லாம் சீண்டலாமோ அவற்றையெல்லாம் அரசு செய்து வருகிறது. நிலப்பறிப்புகள், தொல்லியல் ஆய்வு என்ற கையகப்படுத்தல்கள், ஜனாசா விடயம், சில அமைப்புகள் மீதான தடைகள், கைதுகள்,மண்ணகழ்வு என்று தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்தும் செயல்கள் நடைபெற்று வருகின்றன. அதே வேளை இந்த அரசு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பல அழுத்தங்களைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன.|சீனாவால் அமைக்கப்பட்ட துறைமுக நகரத்தின் உரிமம் தொடர்பான விவகாரம், சீனாவுடனான இரண்டறக் கலந்தநிலை, இதனால் மேற்குலக-ஆசிய ஜனநாயக நாடுகள் அடைந்துள்ள அதிருப்தி,இந்தியாவுடனான இடைவெளி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையுடனான முரண்பாடு என்று பல நெருக்கடிகளை இந்த அரசாங்கம் சந்தித்துள்ளது.இதை விட அரசாங்கக் கூட்டுக் கட்சிகளுடனான முரண்பாடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளின் ஆரம்பநிலை,அதன் இயக்குனர்கள் தொடர்பான எழுவினாக்கள்,சிவில்சேவைக்குள் இராணுவ அதிகாரிகளின் நியமனங்கள், 20 ஆவது அரசியல்யாப்புத் திருத்தத்தினால் ஜனநாயகத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள், பொருளாதார நெருக்கடி, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அளவு கடந்த கடன்சுமை, பாவனைப்பொருட்களின் விலை உயர்வு,கொரோனா நெருக்கடி,சுயாதீனத் துறைகளுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடுகள், ஆதரவளித்த பௌத்த பிக்குகளின் அரசுக்கு எதிரான கண்டனங்கள், ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுபினரான விஜயதாச ராஜபக்சவின் காட்டமான விமர்சனம்,பாராளுமன்ற உறுப்பினர் அனுரக்குமாரவின் அறிவியல் பூர்வமான விமர்சனம்,ஆளும் அரசாங்கத்திலுள்ள 11 கட்சிகளின் வெளிப்படையான அதிருப்தி, அவற்றுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் என்று இன்றைய அரசாங்கம் குறைந்த காலத்தில் கூடியளவான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இப்படியான நிலையில் அரசாங்கமானது தொடர்ந்தும் சிங்கள மக்களை எவ்வாறு தம்பக்கமாக ஈர்ப்பது என்பதில் தடுமாறிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களை அடக்குவதன் ஊடாகவும், அவர்களது நிலபுலங்களையும், காலாசாரத்தலங்களையும் மேலாண்மை செய்தல் அல்லது கையகப்படுத்துவதன் மூலமாகவும் சரிந்து போகும் சிங்கள வாக்குகளை தாக்குப் பிடிக்க அரசு முயல்கிறது. ஆனால் அரசின் தலைக்கு மேல் வெள்ளம் செல்லக் கூடிய நிலைமை தான் தென்படுகின்றது. இப்படியான நிலையில் தமிழ் பேசும் மக்களை சீண்டியும். நோண்டியுமாவது சிங்கள மக்களை தம்பக்கம் வைத்துக் கொள்ளவே அரசு முயல்கிறது. புதிய அரசியல் யாப்பு, மாகாண சபைநீக்கம் என்ற கதைகள் எல்லாம் சிங்கள மக்களையும், பௌத்த பிக்குகளையும் திருப்பப்படுத்தும் மந்திர தந்திரங்களாகவே இருக்கின்றன. எனவே இந்த அரசு முன்னோக்கி நகர்வதைவிடவும் ஸ்ரீமா,பண்டா காலத்தை நோக்கிப் பின்னோக்கிச் செல்லவே துடிக்கிறது. இந்தப் போக்கு கடந்த காலப்படிப்பினையை உதாசீனம் செய்வதாகவேயுள்ளது. போர் வெற்றியை அறிவியல் பூர்வமாக அணுகாமல் ஆணவ ரீதியாகவும், அடக்கு முறை ரீதியாகவும் அணுகவே அரசு விரும்புகிறது.இது வெற்றியளிக்காது.காலம் அதற்கான பதிலை அளித்தே தீரும்.