பிரார்த்தனைக்கு நல்லை குருமுதல்வர்,ஆயர் கோரிக்கை!
பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலன் பெற நாளை முதல் நண்பகல் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச் செய்து பிராத்தனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார் நல்லை ஆதின குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள்.
ஆலயங்களில் நாளாந்த பூசைஇ நித்திய நைமித்திய வழிபாடுகளைச் செய்யுங்கள். அடியவர்கள் ஆலயங்களில் கூடுவதைத் தவிருங்கள். பொதுமக்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதை இயன்றவரை கட்டுப்படுத்துங்கள். சுகாதார மருத்துவ சமூகத்தின் வேண்டுதலுக்கு அனைவரும் மதிப்பளித்து பாதுகாப்பாகச் செயற்படுங்கள். சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள்.
பாரத தேசத்தில் மக்கள்படும் அவலம் ஓயவேண்டும்படி அனைவரும் வீடுகளில் பிராத்தனை செய்யுங்கள். தெருக்களில் கூடுவதையோ தெருவோர வியாபாரம் செய்வதையோ சுகாதாரத்துக்கு இடையூறாக நடப்பதையோ அனைவரும் தவிருங்கள் – என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே கத்தோலிக்க மக்கள் அனைவரும் மே மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வீடுகளில் குடும்ப செபமாலை சொல்லி கொறோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட அன்னையிடம் இரந்து வேண்டுங்கள் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆணடகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது இனம் – மதம் – நிறம் – மொழி – கலாசராம் – கண்டம் என்ற எந்த வேறுபாடுமின்றி ஒரு கொடிய உலக யுத்தம்போல் சத்தமின்றி இன்று உலக உயிர்களை அழிக்கின்ற கொரோனா நோய் உலக மக்கள் எல்லாருடைய இயல்பு வாழ்வையும் பாதித்து எல்லாரையும் பயத்திலும் பதட்டத்திலும் இனி என்ன நடக்குமோ என்ற ஏக்க உணர்விலும் வாழ வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.