November 21, 2024

உருவாவது சீனஈழம்: சரவணபவன்!

இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும் சர்வதேசத்தால் கையில் எடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
80 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்து தமிழ் இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துச் செயற்பட்டனர். அவர்களின் அர்ப்பணிப்புகள் வீண் போகவில்லை. அவர்களின் அர்ப்பணிப்புகள் ஊடாகவே நாங்கள் இப்போது சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றோம். இல்லாவிட்டால் தமிழ் மக்கள் இந்தத் தீவில் இருந்து எப்போது தூக்கியெறிப்பட்டிருப்பார்கள். அதை நாம் மறந்துவிடுகின்றோம். ஆனால் அந்த வரலாறுகள் இளங்கலைஞர்களால் நினைவூட்டப்படுகின்றது. அது வரவேற்கத் தக்கது. எமது இளைஞர்களை சிறப்பான முறையில் நாம் வளர்க்க வேண்டும். அவர்கள்தான் எமது எதிர்காலத் தலைவர்கள்.
இப்போது கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பன மெல்ல மெல்ல ஒடுக்கப்பட்டு வருகின்றது.  பயங்கரவாதத் தடை சட்டம் எந்நேரமும், எவர் மீதும் பாயலாம் என்ற நிலைமையே இருக்கின்றது. இளைஞர்கள் தங்களை நெறிப்படுத்திச் செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
இப்போது நாட்டில் சீனாவுக்குத் தனி இடத்தைக் கொடுப்பதற்குத் தயாராகின்றனர். 216 ஹெக்ரெயர் பரப்பில் கடல் நிரவப்பட்டு நகர் ஒன்று உருவாக்கப்படுகின்றது. அதில் இலங்கைக்குச் சொந்தமானது 90 ஏக்கர் நிலம்தான். மிகுதி சீனாவுக்கே சொந்தம்.
அந்தப் பகுதிக்கு தனியான சட்டம் கொண்டுவருதற்கு முயன்றனர். நாடாளுமன்றம் கூடக் கேள்வி கேட்க முடியாதவாறு அந்தச் சட்டம் காணப்படுகின்றது என்று அறிய முடிகின்றது. இந்தச் சட்டம் நிறைவேறினால் இலங்கையில் சீன வழி பூட்டப் பிள்ளைகள் உருவாகலாம்.
இந்த நிலைமை இந்தியாவுக்கு ஏற்றதாக இல்லை. மேற்குநாடுகளுக்கும் ஏற்றதாக இல்லை. அதனால் தமிழ் மக்களின் பிரச்சினையைக் கருவியாக்கி மீண்டும் கையில் எடுக்கப்படும் சாத்தியங்கள் உண்டு.
தமிழ் மக்களை அரசு அரவணைத்துச் சென்றால் நாட்டை முன்னேற்ற முடியும். இவற்றை எல்லாம் உணராது  நாட்டை அடகு வைக்க முயல்கின்றனர். இவற்றால் எழும் இன்னங்களுக்கு அரசு மட்டுமல்ல முழு நாடுமே விலை கொடுக்க நேரிடும்.