November 21, 2024

ஏன் தூபி வெள்ளையடிப்பு?

யாழ்.பல்கலையில் மீளக்கட்டியெழுப்பப்பட்ட நினைவுதூபி பற்றிய சர்ச்சைகள் மத்தியில் எவ்வாறு வெள்யைடித்து தூபி அமைக்கப்படுகின்றதென்பதை அம்பலப்படுத்தியுள்ளார் வலை பதிஞர் ஒருவர்.ஏன் புதிய தூபியென விளக்கியுள்ளார்.

ஓர் இனத்தை அடிமாடாகக் கருதும் ஆட்சியாளரிடமிருந்து அவ்வின மக்கள் விலகியிருக்கவேண்டும். வரலாற்றின் போக்கில் ஓர் சம்பவத்தை இங்கே எழுதுகிறேன்.

வியட்னாம் போர்முடிந்து, அமெரிக்கர்கள் அடித்துவிரட்டப்பட்டு அந்தமண் விடுதளையடைந்தபின், மண்மீட்புப்போரில் இறந்தவர்களுக்காக கல்லறைகள் உருவாக்கப்பட்ட வளாகம் அமைக்கப்பட்டது.  பின்னர் படிப்படியாக மீளவும் வியட்னாம் அமெரிக்க அரசிடம் விலைபோய்விட்டது. ஆனால் இவ்வாறான ஒரு போரை வியட்னாம் மக்களிடமிருந்து மீண்டும் எதிர்கொள்ளாதிருக்க அமெரிக்க அரசானது உளவியல் சிதைப்பு வேலைகளில் ஈடுபட்டது.  வியட்னாமின் இளம்சந்ததியானது தனது மூத்தோரின் வரலாற்றை நினைவுகொள்ளாதிருக்க,  அவர்களை வைத்தே அரசியல் செய்யப்படவேண்டுமென்று அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.

கல்லறை வளாகங்களுக்கு அருகிலேயே விபச்சார விடுதிகள், மதுபானநிலையங்கள் அமைக்கப்பட்டன. விபச்சார விடுதிகளில் இடம் கிடையாதோர், பெண்களை அழைத்துக்கொண்டு கல்லறை வளாகங்களின் இருட்டில் கரைந்தார்கள்.  இதுதான் ஆதிக்க அரசுகள் மேற்கொள்ளும் „அடிமாட்டு“ அரசியல். இந்த அரசியலில் ஒடுக்கப்பட்ட இனங்கள் அவதானமாயில்லையெனின் அ(ந்)தோ கதிதான்.

நேற்று யாழ்.பல்கலையில்  புதிதாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியானது தமிழின அழிப்பிற்கு வெள்ளையடிக்கும் தூபியாகும். அந்தவேலையை தமிழ் இளம்சந்ததியை வைத்தே சிறிலங்கா அரசு செய்திருக்கிறது. இடிக்கப்பட்ட தூபிக்கும், கட்டப்பட்ட தூபிக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியவில்லை என்றால் கடந்துசெல்லுங்கள். தெரிந்தும் கைதட்டுகிறீர்கள் என்றால்  வியட்னாம் மக்களை விட மோசமாகச் சென்றுகொண்டிருக்கிறோம் என்று பொருள்.

தலதா மாளிகை குண்டுவெடிப்பில் சிதைந்த பின்னர், மீளக்கட்டியெழுப்பும் திட்டமிடலின்போது (பாதுகாப்புக்காரணங்களைக் காரணம்காட்டி)  ஏரிக்கரையிலிருந்து சற்று விலகி, நுழைவாயிலை மறுபுறமாக அமைத்தால் நல்லது என அரசு வினவியபோது தேரர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். „இல்லை, இது சிங்கள இனத்தின்  வரலாற்று அடையாளம்“ . இதில் எள்ளளவும் மாற்றமுடியாதென்பதே அவர்களது வாதமாக இருந்தது.

„இதுதான்“  எங்கள் வரலாறு என்று இறுமாப்புடன் நின்ற இனம், „இதாவது“ என்ற நிலைக்கு இறங்கியதுமட்டுமல்லாமல்,  இதை எழுச்சியின் வடிவம் என்று வேறு அடையாளப்படுத்துகிறது.

எங்கிருந்தோ வந்த சிங்களவனிடம், இங்கேயேயிருந்த நாம் வரலாறு கற்கவேண்டியிருக்கிறது.

– தேவன்