November 21, 2024

முகவர்களாக மாறியுள்ள நேரடி பிரதிநிதிகள் ஆபத்தானவர்கள்!

இலங்கை அரசின் எடுபிடி முகவர்களாக மாறியுள்ள நேரடி பிரதிநிதிகள் ஆபத்தானவர்கள் என்கிறார் மனோகணேசன்.

நேற்றைய தினம் சரத் பொன்சேகாவிற்கு கைகொடுத்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் ஆளும் அணியிலும், நமது எதிரணியிலும் கூட சில சகோதர இனத்து நண்பர்களுக்கு என்னை பிடிக்காது.

இதன் அர்த்தம் அவர்கள் என்னை வெறுகிறார்கள் என்பதல்ல.

மனோ கணேசனுக்கு “தமிழ் திமிர்” இருக்கின்றது. இவருக்கு பதில், நல்ல ஒரு “தமிழ் அடிமை” இருந்திருந்தால் நல்லதுதானே என்றுதான் அவர்கள் நினைக்கின்றார்கள்.

அவர்கள் பார்வையில் அவர்கள் நினைப்பதில் தவறில்லை. நான் ஒரு அடிமை-தமிழன் இல்லையே. நான் ஒரு திமிர்-தமிழனாச்சே..! தமிழருக்கோ, தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கோ சிக்கல் வரும்போது நான் வாயை மூடிக்கொண்டு இருப்பதில்லையே..!

நான் அவர்கள் மொழியிலே பேசி, அவர்களின் விகாரைக்கும் போகிறேன். ஆகவே என் முகத்துக்கு நேரே எவரும் என்னுடன் மோதார். ஆனால், அவர்கள் முகங்களை என்னால் வாசிக்க முடிகிறது.

என்னைப்பற்றி என் முகத்துக்கு பின்னே இவர்கள் பேசுவது என் காதுகளை எட்டுகிறது. “சரத் பொன்சேகாவுடன் அன்று சபையில் நேரடியாக மோதினான். இன்று அந்த மனிதரை நேரடியாக சென்று பாராட்டுகிறான். ஏன் தெரியுமா?” என்று ஒரு குழு நேற்று பேசிக்கொண்டது எனக்கு தெரியும்.

உண்மையில் இவர்கள் ஆபத்தானவர்கள் இல்லை. பெரும்பான்மை கட்சிகளுக்குள் நேரடி அங்கத்தவர்களாக இருக்கும் தமிழர்கள்தான் ஆபத்தானவர்கள்.

தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக, பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் சென்று நம்மைப்பற்றி போட்டுக்கொடுக்கின்ற, இந்த „செந்தமிழர்கள்“தான் ஆபத்தானவர்கள்.

கடந்த முறை, நான் சரத் பொன்சேகாவுடன் பகிரங்கமாக முரண்பட்ட போது, அவரை தேடி சென்று, “பாருங்கள் சேர், மனோ கணேசன் உங்களை பற்றி இப்படி பேசுகிறார்” என்று கூறியவர்களை எனக்கு தெரியும்.

இதேபோல், ரணில்  விக்கிரமசிங்கவிடம்  இருந்த சிலரையும் எனக்கு தெரியும். சமீப காலமாக, சஜித் பிரேமதாசவிடம் சென்று, இதே மாதிரி கூறுகின்றவர்களையும் எனக்கு தெரியும்.

இந்த „தமிழர்கள்“, தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக பெரும்பான்மை  அரசியல்வாதிகளிடம் கூழைக்கும்பிடு போட்டு, காட்டிக்கொடுக்கும் அரசியல் எடுபிடிகள். அவ்வளவுதான்.

ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் எனது முரண்பாடுகள் எப்போதும் நமது மக்கள் நலன் பற்றிதான். எனது தனிப்பட்ட தேவைகளுக்காக நான் என் வாழ்வில் ஒருபோதும் பெரும்பான்மை அரசியல்வாதிகளை நாடியதில்லை. ஆகவே எனக்கு இவர்களிடம் எந்தவித கடப்பாடும்  கிடையாது.

ஆகவே என் வழி, தனிவழி. அதில் நான் போகிறேன். நாம் போகிறோம்.