November 24, 2024

வண்ணனையும் சுவாமிகளையும் மோதவிடும் ஆடுகளம் தயார்! பனங்காட்டான்

இலங்கையின் நிகழ்கால அரசியல் இருதரப்பிலும் தொங்குபாலத்தில் சென்று கொண்டிருக்கிறது. யார் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்று இனங்காண முடியாத நிலையே தொடர்கிறது.கோதபாய அரச தரப்பு ஆரம்பம் முதல் இன்றுவரை தங்களுக்குள் இருவகையான போக்கை கையாள்கிறது. அப்பாவி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி ஆட்சியை நகர்த்தும் போக்கு இது.

தமிழர் தரப்பை கையாளும் விதத்தை நோக்கின், நெருக்கடியான விடயங்களை அவ்வப்போது திசை திருப்பும் வகையில் காய்கள் அங்குமிங்கும் மாற்றப்படுகின்றன. தொல்பொருள் ஆய்வு என்ற ஆயுதத்தை இதற்காக கையில் எடுத்துள்ளனர்.

தமிழர் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எந்த விடயத்தை முதன்மைப்படுத்தினாலும், அடுத்த நிமிடமே அவர்களை ஏதாவது ஒருவழியாக முடக்குவதற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கு செல்வர். அவ்விடத்தை அகழ்வாய்வு செய்ய ராணுவமும் கூடச் செல்லும்.

பிறகென்ன, ஓரிரு வாரங்களுக்கு இதனை எதிர்த்து தமிழர்கள் தங்களால் முடிந்தளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்வர். அடுத்து இன்னொரு விடயத்துக்கு கண்டனப் போராட்டத்தை தமிழர் நடத்தினால், அதனை முறியடிக்க (திசை திருப்ப) தொல்பொருள் ஆய்வுக்குழு அவ்விடத்துக்குப் பொலிசாருடன் சென்று பௌத்த மத எச்சமொன்றைத் தேடி முற்றுகையிடும்.

முன்னைய காலங்களில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தங்களை முறியடிக்க, அந்தச் சங்கங்களின் தலைவர், செயலாளர் போன்றவர்களை தண்ணீர் இல்லாத இடங்களுக்கு (மன்னார், அம்பாறை, அம்பாந்தோட்டை) திடீர் இடமாற்றம் செய்வது வழக்கம். இது வேலைநிறுத்தத்தை தளர்ச்சி அடையச் செய்யும் உபாயம். இப்போது தமிழர் போராட்டங்களை முறியடிக்க தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் அதே உபாயம் மேற்கொள்ளப்படுகிறது.

கோதபாய நிர்வாகத்தின் இரண்டாவது உத்தி, ஆட்சித்தரப்பில் உள்ளவர்கள் – அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்ற வேறுபாடில்லாது தங்கள் விருப்புக்கு ஏற்றவாறு எங்கும் எதனையும் கூறலாம். ஊடகங்களுக்கான பேட்டிகளிலும் அறிக்கைகளிலும் தெரியாததும் புரியாததுமான எதனையும் சொல்லலாம்.

இவர்கள் சொல்வது சரியோ, பிழையோ அதுபற்றி ராஜபக்சக்களுக்கு அக்கறையில்லை. சொல்லப்படும் விடயத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பில்லை என்றால் அதுவே அரசின் தீர்மானமாக மாறும். எதிர்ப்புக் கிளம்பினால் சொல்லப்பட்ட விடயத்தை அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறி மழுப்பிவிடும்.

மக்கள் மனதை நாடி பிடித்துப் பார்க்கவே இந்தக் குறுக்கு வழியை ராஜபக்சக்கள் கையாள்கின்றனர். இதற்கான நல்லதொரு உதாரணம், சில தினங்களுக்கு முன்னர் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்த ஒரு கருத்து.

ஜனாதிபதி கோதபாய சர்வாதிகாரி ஹிட்லர் போன்று செயற்படுவார் என்றும், அதற்கே மக்கள் வாக்களித்தனர் என்றும் இவர் தெரிவித்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோதபாய ஹிட்லராகவே செயற்படுகிறார் என்பது தெரிந்த போதிலும் அதனை பகிரங்கப்படுத்தக் கூடாதென்பது அரசியல். ராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு வெளிவந்த மறுநிமிடமே, ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்லர் என்று கொழும்பிலுள்ள ஜேர்மனியின் தூதுவர் ஹோல்கர் செயுபோர்ட் அறிக்கையிட்டு குட்டையை கலக்கிவிட்டார்.

இதனையடுத்து அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல பதில் சொல்ல நேர்ந்தது. ராஜாங்க அமைச்சர் அமுனுகமவின் கருத்து தனிப்பட்ட கருத்து என்று சொல்லி சமாளித்துவிட்டார். கடந்த ஒன்றரை வருட கோதபாய ஆட்சியில் நூறு தடவைக்கும் மேலாக ஷஅது அவருடைய தனிப்பட்ட கருத்து| என்று அரச தரப்பால் கூறப்பட்டதாயினும், அதற்காக எவரும் கண்டிக்கப்படவில்லை, தண்டிக்கப்படவும் இல்லை.

பொதுஜன பெரமுன ஆட்சியில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்தைக் கண்டித்து வெளியிடும் கருத்துகளுக்குக்கூட கடும் நடவடிக்கை எதுவும் இல்லை. பெரும்பான்மையை இழந்துவிடக்கூடாது என்பதுதான் இதற்கான காரணம்.

போதாக்குறைக்கு, பிரதமர் மகிந்தவின் இரண்டு புதல்வர்கள் தெரிவித்த கருத்துகள் எதிர்பாராத வேளையில் ஊடகங்களில் வந்துள்ளன. குடும்ப ஆட்சிமுறையை தாம் எதிர்ப்பதாக மூத்தவர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். அமைச்சரான இவருக்கு எதிர்பார்க்கும் ஏதோவொன்று கிடைக்காததால் எட்டாத பழம் புளிக்கிறது போலும். மகிந்தவின் இளைய புதல்வர் ரோகித ராஜபக்ச ஒருபடி மேலேறி, கிராமங்களுக்கு மட்டும் செல்வதால் அரசில் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்று தமது சித்தப்பாவான கோதபாயவை தடவிப் பார்த்துள்ளார்.

இதற்கிடையில், பசில் ராஜபக்சவின் மனைவி – இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட புஸ்பா ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து கொழும்பு திரும்பியுள்ளார். சட்டத்தரணியான இவர் பல பொது நிகழ்ச்சிகளில் தடல்புடலாக கலந்து வருகிறார். மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு இவர் இறக்கப்படப் போவதாக சிங்கள ஊடகங்கள் முன்னுரை எழுத ஆரம்பித்துள்ளன.

பசிலை எதிர்க்கும் விமல் வீரவன்ச, உதய கம்பன்பில அணியினர் புஸ்பாவை என்ன செய்யப் போகின்றனர்?

மேல் மாகாண முதலமைச்சர் பற்றி பேச்சு அடிபடும் இவ்வேளையில், வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் பற்றிய ஆருடங்களும் கசிய ஆரம்பித்துள்ளன. குறுகிய காலத்தில் கோலஉடை விவகாரத்தில் பிரசித்தி (?) பெற்றிருக்கும் யாழ். மாநகர மேயர் வி. மணிவண்ணனுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது.

காவற்பணிக்கு ஐவரை நியமித்தமை தொடர்பாக, கைதாகி பிணையில் வெளிவந்திருப்பது முதலமைச்சர் பதவிக்கான தகுதியாக பொதுவெளியில் பேசப்படுகிறது. இவரைத் தமது கட்சியிலிருந்து வெளியேற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணி வழக்கம்போல மாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்குமானால், அது மணிவண்ணனுக்கு வாய்ப்பாகும் என்பது சிலரது கணக்கு.

அதேசமயம், மணிவண்ணன் டக்ளஸ் தேவானந்தவின் ஆளா? சுமந்திரனின் ஆளா? என்ற பட்டிமன்றமும் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு அரசியல்வாதிகளும் தங்களின் எதிர்கால தேர்தலின் பொப்புலாரிட்டிக்காக மணிவண்ணனை மையப்பொருளாக்கி விளையாடுகின்றனர் என்று எவராவது சொன்னால், அதில் தவறிருக்க முடியாது.

வெற்றிக்கு ஆயிரம் தந்தையர் உரிமை கோருவர் என்பது மணிவண்ணன் விடயத்தில் பொருத்தமான பழமொழியாகியுள்ளது. மணிவண்ணன் நாடகம் அரங்கேற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வடமாகாண முன்னாள் அமைச்சரும், யாழ்;. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் எவரும் எதிர்பாராத வகையில் வெடிகுண்டொன்றை மெதுவாக தூக்கி வீசியுள்ளார். இக்குண்டு வெடிக்குமா இல்லையா என்பது காலக்கிரமத்தில் தெரியவரும்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை புகழ் வேலன் சுவாமிகள் வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார் விக்னேஸ்வரன். இதனை மட்டும் அவர் சொல்லவில்லை. மாவை சேனாதிராஜாவிலும் பார்க்க வேலன் சுவாமிகளே பொருத்தமானவர் என்ற இவரது ஒப்பீடு தமிழரசுக்குள் சிலருக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் பதவிக்கு வேலன் சுவாமிக்கு என்ன தகுதியுண்டு என்ற கேள்வியும் எழும்பாமல் இல்லை. இதற்கான பதிலாக சில விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற சிறந்த மாணவரான வேலன் சுவாமிகள், மொறட்டுவையில் உள்ள கட்டுபெத்த பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று பொறியியலாளர் பட்டம் பெற்றவர் என்று சக மாணவர்கள் சுட்டியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் தகுதி பெற்ற ஒரு மாணவராக இவர் திகழ்ந்தவராம்.

அண்மையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மக்கள் சமூக மையத்தின் அமைப்பாளராக வேலன் சுவாமிகள் சகல மதத்தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து இளையோரை முன்னிலைப்படுத்தி சாத்வீகப் போராட்டம் நடத்தியதால் நன்கு அறியப்பட்டவராகியுள்ளார்.

இவரது பெயரை முதலமைச்சர் பதவிக்கு விக்னேஸ்வரன் முன்மொழிந்ததை, வடமாகாணசபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு மாவை சேனாதிராஜா பற்றியும், தமது எதிர்கால அரசியல் பற்றியும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்தை இங்கு மீள்பிரசுரம் செய்வது தவிர்க்க முடியாததாகியுள்ளது:

‚மாவை சேனாதிராஜாவைப் பொறுத்தவரை அவர் ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. உட்கட்சிப் பிரச்சனையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்……ஒரு கூட்டுக்குள் இருந்த சிலரை வெளியே போகப்பண்ணியதை இல்லையென யாரும் சொல்ல முடியாது. நான்கூட (வெளியே) போகலாம்“ என்று தமிழரசின் மூத்த துணைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருப்பதில் பொதிந்திருக்கும் அர்த்தம் என்ன?

ஒரு கதிரைக்கு மணிவண்ணனும் வேலன் சுவாமிகளும் போட்டியாளர்களாக இறக்கப்பட்டு விட்டனர் என்று கொள்ளலாமா?