டக்ளஸ் யோசிக்க வேண்டும்:செல்வம்!
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். போர்க் காலத்தின் போது எமது மீனவர்கள் குறுகிய கடல் பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இவ்வாறான ஒரு பிரச்சினை உள்ள போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் இந்திய ரோலர் படகுகள் உட்பட படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
ஆயினும் வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்ற போது தமிழ் நாட்டு மக்களுக்கும், எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ் நிலை காணப்படும்.
எனவே இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.